×

விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம்; குளறுபடி எதிரொலி விளக்கம் அளிக்காவிட்டால் 500 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்?

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியதில் சில மாணவர்களுக்கு மதிப்பெண்களில் குளறுபடி நடந்துள்ளதை அடுத்து 500 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள்  உரிய விளக்கம் அளிக்காவிட்டால் துறைரீதியிலான நடவடிக்கை பின்னர் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடந்தது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 19ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 29ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவு மே 8ம்  தேதியும் வெளியானது. இதற்கு பின்னர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். ஒரு வாரத்தில் அவர்களுக்கு இணைய தளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீடு செய்யவும் 5ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 1700 மாணவ,  மாணவியரின் விடைத்தாள் மதிப்பெண்களில் வேறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் வேறு ஆசிரியர்களை கொண்டு தேர்வுத்துறை அந்த விடைத்தாள்களை திருத்தியது.
அதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண்களில் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் வரை வேறுபாடு வந்தது. மேலும் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விடைத்தாளின் முகப்பில் குறிப்பிடுவதில் பலர் தவறு செய்திருந்ததும், மொத்த  மதிப்பெண்களை மாற்றி எழுதியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, திருத்திய பட்டியல்களை 27ம் தேதி இணைய தளத்தில் தேர்வுத்துறை வெளியிட்டது. பின்னர், விடைத்தாள் திருத்துவதில் தவறுகள், குளறுபடிகள் செய்த ஆசிரியர்கள் 500 பேர் இனம் காணப்பட்டனர். அவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு, தேர்வுத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து, 500 ஆசிரியர்களுக்கு உரிய விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த வாரம் அந்த ஆசிரியர்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் விளக்கத்தில் திருப்தி இல்லாத நிலையில், அவர்கள் மீது ‘17பி’ என்னும் ஒழுங்கு நடவடிக்கையை பள்ளிக்  கல்வித்துறை எடுக்கும். எனினும் கடைசி கட்டமாக அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விடைத்தாளின் முகப்பில் குறிப்பிடுவதில் பலர் தவறு செய்திருந்ததும், மொத்த  மதிப்பெண்களை மாற்றி உள்ளனர்.

Tags : authors , Neglect,reply,explanation, suspended?
× RELATED உலகளாவிய நாவல்களில் ஆர்.கே.நாராயண்,...