×

கறம்பக்குடி பகுதியில் வரத்து வாரிகளை தூர்வாராததால் மழை நீர் வரத்து பாதிப்பு

கறம்பக்குடி: கறம்பக்குடி பகுதியில் உள்ள வரத்து வாரிகளை தூர்வாராததால் மழை நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மஹாத்மா காந்தி விழிப்புணர்வு நல சங்க கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் வைமா கண்ணன் தலைமை வகித்தார். நல சங்க பொருளாளர் ரோசினி அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பங்களா குளம் கோழி கிடாப்பு குளம் குட்டை குளம் அனுமார் கோயில் குளம் சிவன் கோயில் குளம் பள்ளிவாசல் குளம் தென்னகர் பிள்ளையார் கோயில் குளம் பச்சனாபிக் குளம் போன்ற 8 குளங்கள் கறம்பக்குடியில் பொது மக்கள் பயன் பெறுவதற்காக அமைந்துள்ளன மேலும் பொது பணி துறைக்கு சொந்தமான விவசாயிகள் பயன் பெற கூடிய பாசன குளங்கள் ஏராளமாக அமைந்துள்ளன கறம்பக்குடி பகுதியில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டத்தை 8 குளங்களும் உயர்த்தி வந்தன.

ஆனால் கடந்த பல வருடங்களாக மழை இன்றி எல்லா குளங்களும் வறண்டு போய் காணப்படுகின்றன. மேலும் இதில் ஒரு சில குளங்களில் குப்பைகள் கொட்டுவதால் குப்பை மேடுகளாகவும் கழிவு நீர் கலந்து சாக்கடை தொட்டிகளாகவும் காணப்படுகின்றன. தற்போது கறம்பக்குடியில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போய் காணப்படுகிறது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கறம்பக்குடியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இதனால் கறம்பக்குடி பகுதி மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொது குளம் மற்றும் பாசன குளங்கள் அனைத்தும் வறண்டு போய் காணப்படுவதற்கு முக்கிய காரணமாக மழை காலங்களில் மழை பெய்து குளங்களுக்கு நீர் செல்ல கூடிய வரத்து வாரிகள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளன.

மேலும் மழை நீர் செல்லும் வரத்து வரிகள் ஒரு சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் வரத்து வாரிகளை இணைத்து மழை நீரை குளங்களுக்கு கொண்டு போக செய்யும் சுமார் 75க்கு மேற்பட்ட வரத்து வாரி பாலங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு தூர்ந்து போய் அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கன மழை மற்றும் லேசான மழையும் பெய்யும் போது வரத்து வாய்க்கால்கள் வழியாக குளங்களுக்கு செல்ல முடியாமல் பல இடங்களில் மழை நீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தொற்று நோயும் ஏற்படுகிறது. குறிப்பாக கடுமையான தண்ணீர் பஞ்சத்தையும் குடிநீர் பஞ்சத்தையும் எதிர் கொண்டு கறம்பக்குடி மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் குடிநீர் பஞ்சம் தண்ணீர் பஞ்சம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் வரத்து வாரிகளை தூர் வாரியும் அதன் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மழை நீர் வரத்து வாரிகளை தூர் வாரியும், பாலங்களை புதுப்பித்தும், புது குளம் மற்றும் பாசன குளங்களுக்கு நீர் வரத்தை ஏற்படுத்தி மழை காலங்களில் குளங்களை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கறம்பக்குடி பகுதி மக்களை குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் உயிர் நீர் என்பதையும் சமீபத்தில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கவலையையும் அக்கறையையும் கருத்தில் கொண்டு கறம்பக்குடியி–்ல் பொது குளம் மற்றும் பாசன குளங்களுக்கு செல்லும் வரத்து வரிகளை தூர் வாரி சீரமைத்து கறம்பக்குடி மக்களை காக்க வேண்டும் என மஹாத்மா காந்தி விழிப்புணர்வு நல சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Karamakudi, rain water
× RELATED மர்ம நபர்கள் அட்டகாசத்தால் திற்பரப்பு தடுப்பணையின் மதகுகள் சேதம்