×

தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு குறைக்கப்படும்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு குறைக்கப்படும், என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 45.1 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் 19 நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைந்துள்ளன. இந்த ரயில் நிலையங்களில் மின்சார சிக்கனத்தை கருத்தில் கொண்டு சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டு வருகிறது.  
இந்நிலையில், மின்சார செலவீனத்தை குறைக்கும் வகையிலும், குடிநீர் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டும் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடும், மின்சார பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சென்னை குடிநீர் வாரியமும் அறிவுறுத்தி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தேவையான தண்ணீரை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில கூலிங் டவர்களில் இந்த தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாகதான் சுரங்கப்பாதை நிலையங்களுக்கு குளிர்சாதன வசதி கிடைக்கிறது. சில மெட்ரோ ரயில் நிலையங்களில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.  எனவே, மின்சார செலவினத்தை குறைக்கவும், தண்ணீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டும் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை படிப்படியாக குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி தங்குதடையின்றி கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

Tags : AC ,stations ,administration announcement , Considering , water scarcity, Metro train ,reduced, admin notification
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...