×

வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் எல்லைகளில் சோதனை நடத்த பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வருவதை தடுக்கவும், ஆய்வு நடத்தவும் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த தடை உத்தரவு சென்னை மாநகராட்சியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் கடந்த வாரம் வரை நடத்தப்பட்ட ஆய்வில் 200 டன்னுக்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவற்றிற்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சோதனை மேலும் தீவிரப்படுத்த வார்டு அளவில் 200 குழுக்களை அமைக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சென்னையின் எல்லை பகுதிகளான திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 5 டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வெளி மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வருவதை தடுக்க பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மாநகராட்சியின் எல்லை பகுதிகள் மூலம் பிளாஸ்டிக் கொண்டு வருவதை தடுக்க பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வணிகவரித் துறை, காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவானது நகரின் எல்லைப் பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்துவார்கள். மேலும் மொத்தமாக விற்பனை செய்யும் இடம் மற்றும் உற்பத்தி செய்யும் இடம் ஆகியவற்றிலும் இந்த குழு ஆய்வு நடத்தும். இதை தவிர்த்து சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது மூன்று முறைக்கு மேல் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Planning Commission ,states , Plastic, foundry, testing, Various officers, including the Commission, Municipal Commissioner, Prakash Information
× RELATED திருவையாறில் அரசு திட்டப்பணிகள் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஆய்வு