×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை: ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு

சேலம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை நடத்தியதில், கொல்லிமலை பகுதியை சேர்ந்த ஏழை பெற்றோரின் குழந்தைகளை புரோக்கர்கள் வாங்கி பலருக்கு விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.

இதுவரை நடந்த விசாரணையில், 35 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில், சேலம் மாவட்டத்திலும் சில இடங்களில் இருந்து குழந்தைகளை புரோக்கர்கள் பெற்றுச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக தற்போது விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். சேலத்தில் கைதான செவிலிய உதவியாளர் சாந்தி கூறிய தகவலின் அடிப்படையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலரிடம் ரகசியமாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் நேற்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். அரசு மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் சிலரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினமும் 50க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கும், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்தும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும், சில ரகசிய தகவல்களும் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில்தான், அரசு மருத்துவமனையில் டிஎஸ்பி கிருஷ்ணன் விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Tags : Rasipuram Children's Sale Case Salem Government Hospital CBCID Police Investigation , Rasipuram, Children's Case, Salem Government Hospital, CBCID Police, Investigation
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...