×

கள்ளுக்கு தடை நீக்க அமைத்த சிவசுப்பிரமணியன் குழு அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

ஈரோடு: கள்ளுக்கு தடையை நீக்க அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் குழு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பிய மனு:
கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதை பொருளோ, மதுவோ  அல்ல. அது உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு  சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. தமிழகத்தில்  மட்டும் கள்ளுக்கான தடை  கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருவது அரசியல்  அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. இவற்றை  வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக கள் இயக்கம் கடுமையான போராட்டங்களை நடத்தி  வந்துள்ளது. கள் இயக்கம் கொடுத்த நெருக்கடியால் கடந்த 2009ம் ஆண்டு  நீதியரசர் கே.பி.சிவசுப்ரமணியம் தலைமையில் குழு  அமைக்கப்பட்டது.

இந்த  குழுவின் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பல  இடங்களில் டாஸ்மாக் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில்  நீதியரசர்  கே.பி.சிவசுப்ரமணியம் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.  பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டபோது கள்ளுக்கு விலக்கு  அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கள் இயக்கம் விடுத்திருக்கும் இந்த கோரிக்கையை   ஏற்று நீதியரசர் கே.பி.சிவசுப்ரமணியம் குழுவின் அறிக்கையை விரைவில்  வெளியிட வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறி உள்ளார்.

Tags : Sivasubramanian , Sivasubramanian ,group, , publishing ,report
× RELATED பழநியில் மடத்து நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது