×

நெல்லை - தூத்துக்குடி வழித்தடத்தில் நடத்துனர் இல்லா பஸ்சில் அவதிக்குள்ளாகும் பயணிகள்: டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

நெல்லை: நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு நடத்துனரின்றி இயக்கப்படும் பஸ்கள் சமாதானபுரத்தில் நிறுத்தி ஸ்டேஜ்கள் முடிக்கப்படுவதால் காலவிரையம் ஆவதாக பயணிகள் புலம்பி தவிக்கின்றனர். நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தூத்துக்குடி வழித்தடத்தில் நடத்துனர் இல்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகத்தில் தூத்துக்குடி வழித்தடத்தில் நடத்துனர் இல்லா பஸ்கள் இயக்கப்பட்ட போது புதிய பஸ்நிலையத்தில் இதற்கென்று தனியாக டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டது. தூத்துக்குடி செல்லும் பயணிகள் கவுன்டரில் டிக்கெட் எடுத்த பின்னர் பஸ்களில் ஏறி இருக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இருக்கை முழுவதும் நிரம்பிய பின் பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சி அனுமதியின்றி போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதைத்தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் முன் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கபடும். பின்னர் கண்டக்டர் ஸ்டேஜ் முடித்து மீதி உள்ள டிக்கெட், இன்வாய்ஸ் ஆகியவற்றை டிரைவரிடம் வழங்கிய பின் பஸ் புறப்படும் என்று நடைமுறை வந்தது. இதில் ஒரு சிக்கல் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் நடத்துனர் இல்லா பஸ்சில் (இடைநில்லா பஸ்) என்பதால் அதிகப்படியான பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம், சமாதானபுரம், கேடிசி நகர் வரை தூத்துக்குடி செல்லும் பயணிகள் காத்திருக்கின்றனர்.

தற்போது நடத்துனர் இல்லாத பஸ்சிற்கு புதிய பஸ்நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இல்லாததால் ஒரு நடத்துனர் மட்டும் சமாதானபுரம் வரை பயணிகளுக்கு டிக்கெட் வழங்க வருகிறார். சமாதானபுரம் வந்ததும் பஸ்சில் ஏறிய அனைவரும் டிக்கெட் எடுத்ததை உறுதி செய்துவிடுகிறார். பின்னர் டிக்கெட் இன்வாய்ஸ் சரிபார்த்து, மீதி உள்ள டிக்கெட் கட்டுகளையும், இன்வாய்ஸ் உடன் டிரைவரிடம் ஒப்படைத்த பின் பஸ்புறப்பட்டு செல்கிறது. இதனால் 20 நிமிடம் காலதாமதம் ஏற்படுவதாக பயணிகள் புலம்புகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், நடத்துனர் இல்லாத பஸ்கள் இயக்குவது போக்குவரத்து விதி முறைகளுக்கு எதிரானதாகும்.

இந்த நடைமுறையில் பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு முன் டிக்கெட் பெற்றிருக்க வேண்டும். புதிய பஸ்நிலையத்தில் இருந்து கேடிசி நகர் வரை பயணிகள் தூத்துக்குடிக்கு காத்து நிற்பர். ஆனால் சமாதானபுரத்தில் ஸ்டேஜ் முடிக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம், சமாதானபுரம், கேடிசிநகர் ஆகிய பகுதிகளில் நடத்துனர் இல்லா பஸ்சில் பயணிக்கும் வகையில் புதிய டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட வேண்டும். இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து பஸ் வந்ததும் ஏறிச்செல்ல ஏதுவாக அமையும். இதனால் காலவிரையம் தவிர்க்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Passengers ,route ,Nellai-Thoothukudi , Nellai - Thoothukudi, conductorless bus
× RELATED செடிகள் நடுவே பஸ் ஸ்டாப்: பாம்புகள் வருவதால் பயணிகள் பீதி