×

அதிகாரிகள் கடும் கெடுபிடி தனியார் தண்ணீர் லாரிகள் 27ம்தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் பாதிக்கும் அபாயம்

சென்னை: நிலத்தடி நீரை எடுக்க அதிகாரிகள் கடும் கெடுபிடி செய்வதால் அவர்களை கண்டித்து வரும் 27ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். எவ்வளவு பணம் கொடுத்தாலும் தண்ணீருக்கு போட்டி போடும் நிலையே உருவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் நியமிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. அதே நேரம் ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தனியார் லாரிகளே பெரும்பாலும் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். தனியார் குடிநீர் லாரிகளை நம்பி தான் சென்னையில் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை ஓடுகிறது.

அதிக பணம் என்றாலும் வாங்கும் மக்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். இந்த சூழ்நிலையில், தனியார் லாரிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை வாங்கி தான் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் லாரிகள் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் கடும் கெடுபிடிகள் செய்வதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதை கண்டித்து நேற்று மடிப்பாக்கத்தில் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது வரும் 27ம்தேதி முதல் காலவரயைற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வரும் மக்களுக்கு தனியார் லாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமயைாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் கூறுகையில்,‘‘ தண்ணீர் இருக்கும் பகுதியில் இருந்து தான் எடுத்து மக்களுக்க வழங்க முடியும். கடும் பற்றாக்குறை இந்த காலகட்டத்தில் எங்களை தண்ணீர் எடுக்க விடாமல் அரசு அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர்.

இதுபற்றி மேல் அதிகாரிகளிமும் பேசி எந்த பயனும் இல்லை. தமிழகம் முழுவதும் 15000 தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. சென்னையில் மட்டும் 5500 தனியார் தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. இவற்றை தடுத்தால் சென்னையின் நிலமை என்னவாகும்?  இந்த பிரச்னைக்கு அரசு அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Corporates ,Water Laries ,Strike , Officers, heavy security, private water lorries, indefinite, strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து