×

கோயில் கலசங்களை திருடி மறைத்து வைத்த மர்மநபர்கள்: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மல்லிநகர் மாரியம்மன் கோயிலில் கலசங்களை திருடி, அன்னை சத்யாநகர் மதுரைவீரன் கோயிலின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அன்னை சத்யாநகர் அடுத்துள்ள மல்லிநகரில் எல்லை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்து 3 புதிய செம்பு கலசங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தபோது, கலசங்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஒரு கலசம் மட்டும் கோயிலுக்கு பின்புறம் கிடந்தது.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையில், அன்னை சத்யாநகர் மதுரைவீரன் கோயிலின் பின்புறம் இன்று காலை சந்தேகப்படும்படியாக பச்சைநிற மூட்டை கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த மூட்டையை திறந்து கீழே கொட்டியபோது, அதில் கோயில் கோபுரத்தில் வைக்கப்படும் இரண்டு அடி அளவுள்ள 2 கலசங்கள் மற்றும் பெரிய கேஸ் அடுப்பின் பர்னர் ஸ்டேண்டு இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது, அது மல்லிநகர் எல்லை மாரியம்மன் கோயிலில் திருட்டு போனது என்பது தெரியவந்தது. விஏஓ ஜான் சம்பவ இடத்தில் கிடந்த கலசத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் மல்லிநகர் பகுதியிலும், அன்னை சத்யாநகர் பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.  

போலீசார் கூறுகையில், ‘‘எல்லை மாரியம்மன் கோயிலில் இருந்து நேற்று இரவு மர்மநபர்கள் மூன்று கோபுர கலசத்தையும் திருடியுள்ளனர். இதில் மூன்றில் ஒன்றினை அங்கேயே தவற விட்டுவிட்டு, இரண்டு கலசத்துடன் அன்னை சத்யா நகர் பகுதிக்கு வந்துள்ளனர். இந்த கலசங்களை நெருப்பில் உருக்கி விற்பனை செய்ய மர்மநபர்கள் திருடியிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக கலசத்தை அன்னை சத்யாநகரில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். கோயில் கலசங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகு அதிகாரிகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகிகளிடம் கலசங்கள் ஒப்படைக்கப்படும்’’ என கூறினர்.

Tags : connoisseurs ,Erode , Temple Culverts, Mysteries
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா