×

அகிலேஷ், முலாயம்-க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் எந்த விதமான ஆதாரமும் இல்லை: சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரதீப் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து இருப்பதாக காங்கிரசை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்படி கடந்த 2007ம் ஆண்டு சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2012ல் விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி சிபிஐ க்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக கடந்த மார்ச் 25ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரத்திற்குள் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் மீது விஸ்வநாத் சதுர்வேதி தாக்கல் செய்துள்ள புதிய சொத்துக் குவிப்பு வழக்கு,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  அமர்வில் ஏப்ரல் 12ம் தேதி விசாரணைக்கு  வந்தது. அப்போது, ‘முலாயம், அகிலேஷ் மீதான சொத்து குவிப்பு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணை கடந்த 2013ம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்டது’ என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ தனது பதிலை 4 வாரத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி, இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எந்த புதிய ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Akhilesh ,CBI ,Mulayam , Mulayam Singh Yadav, Akhilesh Yadav, Property Case, CBI, Attachment, Filing
× RELATED அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்