×

ஓட்டு எண்ணிக்கை பொருந்தவில்லை என்றால் தொகுதியின் அனைத்து விவிபேட் சீட்டுகளும் எண்ணப்பட வேண்டும்: யெச்சூரி கருத்து

புதுடெல்லி: எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையுடன், விவிபேட் சீட்டுகளின் எண்ணிக்கை பொருந்தவில்லை என்றால், அந்த சட்டப்பேரவை தொகுதியின் அனைத்து விவிபேட் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு மீது சந்தேகம் எழுப்பின. இதில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை என கூறிவந்த தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் சந்தேகத்தை போக்க விவிபேட் என்ற இயந்திரத்தை அறிமுகம் செய்தது. ஓட்டு போட்டவுடனே, இந்த இயந்திரம் மூலம் நாம் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதன் சீட்டுகள் அந்த இயந்திரத்துக்குள்ளேயே விழுந்து விடும்.

ஓட்டு எண்ணிக்கையின்போது, மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும், ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களின் பதிவுகள், அதன் விவிபேட் இயந்திர சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வந்தது.  இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இவ்வாறு சரிபார்க்கப்பட்டால் தேர்தல் முடிவு வெளியிட 6 நாட்கள் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 ஓட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை, விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என கூறியது.

இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் பதிவுகள், விவிபேட் சீட்டுகளின் எண்ணிக்கையுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது என தேர்தல் ஆணையம் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒரு இயந்திரத்தின் எண்ணிக்கை பொருந்தவில்லை என்றாலும், அந்த சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து விவிபேட் இயந்திரங்களின் சீட்டுகளையும் எண்ண வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Tags : Yechury , Vote count, match, all volume of the block, to be counted, should be commented, echoes
× RELATED ஜனநாயகத்தின் மீது 10 ஆண்டாக தாக்குதல்...