×

ஜனநாயகத்தின் மீது 10 ஆண்டாக தாக்குதல் மதச்சார்பற்ற தன்மை நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்: சீதாராம் யெச்சூரி பேட்டி

புதுடெல்லி: ‘கடந்த 10 ஆண்டாக ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் நாம் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையை நீடிக்கப் போகிறோமா என்பதை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தல் இது’ என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். மக்களவை தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மதச்சார்பின்மை, பொருளாதாரம், சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகிய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையை தொடர்ந்து கடைபிடிக்கப் போகிறோமா என்பதை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தல் தான் வரும் மக்களவை தேர்தல். மேலும், நாட்டில் இனியும் தேர்தலின் இருப்பை உறுதி செய்யக் கூடிய தேர்தலும் இதுதான்.

நாட்டின் இன்றைய நிலையில், அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், மக்களின் மனித மற்றும் சிவில் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் தேவை உள்ளது. இந்த நோக்கத்துடன்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் எங்கள் கூட்டணி பிரபலமடைந்து வருகிறது. சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சரியான திசையில் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மக்களின் முக்கியமான கவலை வாழ்க்கை தரம்தான். கடந்த 10 ஆண்டாக வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. இது பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையையும் முழுமையான அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளன. இதை மறைக்க பாஜ, மத ரீதியாக பிளவுபடுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. அவர்களின் சதி வேலை செய்யவில்லை.

அதனால் அவநம்பிக்கை அடைந்துள்ள அவர்கள், 370 சீட் பெற முடியாது என்பதை நன்கு அறிந்திருப்பதால் தான் மாநிலம் மாநிலமாக எங்கள் கூட்டணியை உடைக்க முயற்சிக்கின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐயை தவறாக பயன்படுத்தி அரசியல் தலைவர்களை அவர்கள் கட்சிக்கு இழுக்கப் பார்க்கின்றனர். கட்சி மாறினால், எல்லா வழக்குகளும் மறைந்துவிடும். இல்லாவிட்டால் ஏற்கனவே சிறையில் இருப்பவர்கள் போல ஜெயிலுக்கு போக வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜ சொல்வது போல் அவர்கள் அதிக தொகுதிகளை வெல்வார்களா என்பது தேர்தல் எந்தளவுக்கு நியாயமாக நடக்கப் போகிறது என்பதை பொறுத்தது. பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர்களில் வந்து தேர்தல் பிரசாரம் செய்து தேர்தல் விதிகளை மீறுகிறார். ஆனால் அதைப் பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. இதுபோல் இல்லாமல் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால், பாஜவின் சொல்வதற்கும் நிஜத்தில் நடப்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனநாயகத்தின் மீது 10 ஆண்டாக தாக்குதல் மதச்சார்பற்ற தன்மை நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்: சீதாராம் யெச்சூரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sitaram Yechury ,New Delhi ,Marxist Party ,General Secretary ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு