×

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் மெத்தனம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் நீதிமன்றம் நியமித்த இடைக்கால நிர்வாகி மெத்தனம் செலுத்தி வருவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ந.பசுபதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அறக்கட்டளையை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் 8 பேரின் பதவிக்காலம் முடிந்தது.  

இதனால், குறிப்பிட்ட 8 பேரையும் தேர்ந்தெடுப்பதற்கு இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை கடந்த ஆண்டு நீதிமன்றம் நியமனம் செய்தது. இவருக்கு தேர்தலை நடத்தி, அறக்கட்டளையை அமைப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் விதிகளை மீறி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடிய செயல்களை அறக்கட்டளைக்கு கீழ் உள்ள கல்லூரிகளுக்கு செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருந்த டி.என்.சேஷன் நீதிமன்ற கட்டளையின்படி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி முடித்தார்.

ஆனால், பி.சண்முகம் முறையாக தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறார். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு பெரும் நிதி இழப்பினை ஏற்படுத்தியுள்ளார். இவரது நிர்வாகத்தில் எதேச்சதிகாரம் மேலோங்கி நிற்கிறது. உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நான் இப்படிதான் செய்வேன் என்று கூறுகிறார். நிர்வாகியாக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகிய போதும் அவர் இதுவரையில் அறக்கட்டளைக்கு கீழ் உள்ள 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஒன்றை கூட பார்வையிடவில்லை. இதேபோல், அறக்கட்டளைக்கு தேர்தல் வேண்டாம் என்பதற்காக அடுக்கடுக்கான காரணங்களை கூறி வருகிறார். எனவே, முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தனது பணியை சரிவர செய்ய வேண்டும். தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : administrators ,Pachaiyappa Foundation: The University Teachers Union , Pachaiyappa Foundation, Executives, Methods, University Teachers Union, Accusation
× RELATED புதிய இயக்குநர் நியமனம்