×

அம்பத்தூர், புதூர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் விபத்து அதிகரிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர் - செங்குன்றம் சாலையில் புதூர் சந்திப்பு அருகே தானியங்கி சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து கனரக வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு இந்த சாலை வழியாகவே செல்கின்றன. ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இச்சாலையில் உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகளும் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் புதூர் பகுதியில் 4 முனை சந்திப்பு உள்ளது.

இங்கு, தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள்  குறுக்கும், நெடுக்குமாக சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் மோதி இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதூர் சந்திப்பு பகுதியை அதிகப்படியான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன. குறிப்பாக, புதூர் மீன் மார்க்கெட், தாங்கல் பூங்கா, அம்பத்தூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களுக்கு இவ்வழியே சென்று வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக கருக்கு, மேனாம்பேடு, கொரட்டூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் புதூர் சாலை வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். புதூர் சந்திப்பு அருகே 4 தனியார் பள்ளிகள், ஒரு கலை கல்லூரி உள்ளது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் புதூர் சந்திப்பை கடந்து தான் சென்று வருகின்றனர். இந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்து வருகின்றனர். ஒரு சிலர் விபத்தில் சிக்கி உயிர் பலியாகி வருகின்றனர். எனவே, புதூர் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Ambattur ,Puthur Junction , Ambattur, Pudur, Signal, lack of Accident, Increase
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...