×

கோவையில் 4 மாதங்களில் ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டிய 32 ஆயிரம் பேர் மீது வழக்கு: ரூ. 32 லட்சத்து 92 ஆயிரம் அபராதம்

கோவை: கோவையில் கடந்த 4 மாதங்களில் ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டியவர்களிடம் ரூ. 32 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் பெரும்பாலும் பைக்கில்  செல்பவர்களே உயிரிழக்கின்றனர். இதனை தடுக்க ஹெல்மட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கோவையிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள்  ஹெல்மட் அணிந்து செல்கிறார்களா? என்று போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சாலைகளில் ஆங்காங்கே நின்று சோதனை செய்து ஹெல்மட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.  கோவையில் கடந்த 4 மாதங்களில் மட்டும்  ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டியவர்களிடம் ரூ. 31 லட்சத்து 92 ஆயிரம் அபராதம்  பெறப்பட்டுள்ளது.

 இது குறித்து கோவை மாவட்ட மேற்கு போக்குவரத்து உதவி  ஆணையர் ராஜ்கண்ணா கூறியதாவது:- கோவையில் போக்குவரத்து போலீசார்  இரு சக்கர வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஹெல்மட் அணிவதன்   அவசியம் குறித்தும் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.  பெரும்பாலான விபத்துகளில் மரணமடைவோரில் இரு சக்கர வாகன ஓட்டிகளே அதிகம்  பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஹெல்மட் அணியாமல்  செல்வதே.  பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்  என்ற உத்தரவை யாருமே கடைபிடிப்பதில்லை. கோவை மேற்கு சரகத்தில் மட்டும்  கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை 31  ஆயிரத்து 921  வழக்குகள் ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்றவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.  அவர்களிடம் இருந்து ரூபாய் 31 லட்சத்து 92 ஆயிரத்து 100 அபராதமாக  பெறப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை நகர்ப்புறங்களில் 80  சதவீதத்திற்கும்  அதிகமானோர் ஹெல்மட் உபயோகப்படுத்துகின்றனர்.

புறநகர்ப்பகுதிகளை  சேர்ந்தவர்கள்தான் இன்னும் இதனை கடைபிடிக்காமல் இருக்கின்றனர். அனைவரும்  ஹெல்மட் அணிவதன் அவசியத்தை உணர்ந்தால் விபத்துகளால்  நிகழும் உயிரிழப்பு  பெருமளவில் குறையும். இவ்வாறு அவர் கூறினார். புதிய பைக் வாங்கினால் ஹெல்மட் இலவசம் உத்தரவு என்னாச்சு?: இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான ஹெல்மட் வழங்க வேண்டும் என்று 1989 மத்திய மோட்டார்  வாகன விதிகள் 138 (4) (எப்) கூறுகிறது. லாபத்தை கருத்தில் கொண்டு சில தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வாறு ஹெல்மெட்களை வழங்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இலவசமாக ஹெல்மட்களை  அளிக்காமல், ஹெல்மட் தலைக்கவசம் வாங்குபவர்களிடம் கூடுதலாகவே கட்டணத்தை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. உற்பத்தியாளர்கள் வாகனத்துடன் இலவசமாக ஹெல்மட் வழங்கினாலும், டீலர்கள் அதனை விற்பனை  செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி தமிழக போக்குவரத்து ஆணையர் அனைத்து மண்டல துணை ஆணையர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இரு சக்கர வாகனம்  வாங்கும் பொதுமக்களுக்கு டீலர்கள் இலவசமாக ஹெல்மட் வழங்குகிறார்களா? என்பதை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதந்தோறும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Helmut , Coimbatore, helmat, bike, case, fine
× RELATED புதிதாக டூவீலர் வாங்குவோரிடம்...