×

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் பரிதாபம் ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவில் :  நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). தொழிலதிபர். இவர் வடசேரி பாலமோர் ரோட்டில் பல்பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா (48). இவர்களது மகள் ஷிவானி (21) கல்லூரி மாணவி. இவர்களுடன் சுப்பிரமணியின் தாயார் ருக்மணியும் (72) வசித்து வந்தார். வழக்கமாக காலையில் ஏஜென்சி ஊழியர்கள் வந்து, சுப்பிரமணியத்திடம் அலுவலக சாவியை வாங்கி செல்வார்கள். அதே போல் நேற்று காலை ஊழியர் ஒருவர் சாவி, வாங்குவதற்காக சுப்பிரமணி வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஹேமாவின் உறவினர்களுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஹேமாவின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில் சுப்பிரமணி, அவரது மனைவி ஹேமா, மகள் ஷிவானி,  தாயார் ருக்மணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.   தகவல் அறிந்து வந்த போலீசார் நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நால்வரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணி, தனது தொழில் தொடர்பாக ஏராளமானவர்களிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாகவும், இந்த கடனை உரிய முறையில் திரும்ப செலுத்த முடியாமல் அவர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் கூறினர். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nagercoil ,Kandavatti ,suicide , 4 people , same family, poisoned
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?