×

காவல் துறையை ஏவி கெயில் திட்டத்தை செயல்படுத்துவதா? : முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை: காவல் துறையை ஏவி கெயில் திட்டத்தை செயல்படுத்துவதா என்று முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகை மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவை குழாய் வழியாக கொண்டு வந்து சேமிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது கண்டனத்திக்குரியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரணியன் உள்ளிட்ட எட்டுபேர் மீது பிணையில் வெளிவர முடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டு காவல் துறை விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.  அம்மாவின் ஆட்சி என்று நொடிக்கொரு தரம் கூறிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சி மத்திய அரசின் எடுபிடி ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் காவல்துறையை ஏவி திட்டத்தை செயல்படுத்தும் கீழ்தரமான நடவடிக்கை ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக எக்காரணம் கொண்டும் குழாய் பதிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே இது குறித்து முத்தரப்பு கூட்டத்தை நடத்தி தீர்வு காண அரசு முன்வர வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்புக்கும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

Tags : Activation ,Gail Project Activate the Gail Project ,farmers association ,Chief Minister , Does the Activation , Gail Project Activate,Gail Project
× RELATED நிலுவை தொகை வழங்க கோரிக்கை