×

வேங்கைவாசல் பகுதி தனியார் நிலங்களில் விதிமீறி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை : பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

தாம்பரம்: வேங்கைவாசல் பகுதியில் தனியார் சிலர் விதிமீறி நிலத்தடி நீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் விற்பனை  செய்வதால், சுற்றுப்பகுதி வீடுகளின் போர்வெல்களில் தண்ணீர் வருவதில்லை, என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் விற்பனை நிலையங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், தனியார் சிலர் தங்களது விவசாய கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 40க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, அதை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், விடுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், சுற்றுப் பகுதி குடியிருப்புகளின் போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இங்குள்ள சிலர், தங்களது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, ராட்சத மின் மோட்டார் மூலம் தினசரி பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.   

இதனால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அனுமதியின்றி இப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்து, கடந்த 10ம் தேதி பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சி எடுத்துச் சென்ற 3 டேங்கர் லாரிகளை சிறை பிடித்து வேங்கைவாசல் பிரதான சாலையில், சந்தோஷபுரம் நடுநிலை பள்ளி அருகே மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும், மேற்கண்ட பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. அனைத்து வீடுகளில் உள்ள போர்வெல்கள், கிணறுகள் அனைத்திலும் தண்ணீர் இல்லை. 2வது முறை போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. காரணம், இங்குள்ள விவசாய கிணறுகள், தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி விற்பதுதான்.

தற்போது, கோடை காலம் என்பதால், கூடுதலாக தண்ணீரை உறிஞ்சி விற்கப்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்தையின்போது, அதிகாரிகள் லாரி உரிமையாளர்களுக்கே சாதகமாக பேசினர். அதாவது, வேங்கைவாசல் ஊராட்சியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் தனியார் லாரிகள், ஒரு லாரி தண்ணீரை விற்பனைக்கு கொண்டு சென்றால், ஒரு லாரி தண்ணீரை வேங்கைவாசல் ஊராட்சி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறினர்.
விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் லாரிகள் பெரும்பாலும் நள்ளிரவில் தான் வந்து செல்கின்றன. இப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் எடுக்கும் தண்ணீரில் சரிபாதி  பொதுமக்களுக்கு பிரித்து கொடுப்பார்கள்?. இதேபோல், மேடவாக்கம், மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளிலும் நிலத்தடி நீர் திருட்டு நடைபெறுகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. தனியார் லாபம் பெறுவதற்காக மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், இதனை உடனே தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

அதிகாரிகள் உடந்தை

நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக தாம்பரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேங்கைவாசல் ஊராட்சி பொதுமக்கள்  மற்றும் லாரி உரிமையாளர்களுடன் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் நேற்று முன்தினம்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும்  பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் எடுத்துரைத்தனர். ஆனால், அதிகாரிகள்  அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக  பேசியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து வெளியேறினர்.

Tags : area ,Vengaiavasal ,lands , Uninterrupted groundwater , private lands Sale:
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...