×

நாமகிரிப்பேட்டை பகுதியில் தோட்டத்தில் 10 அடிக்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளி விற்பனை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த காட்டூரில் உள்ள வயல் பகுதியில் 10 அடிக்கு மேல் ஆழம் பறித்து மணலை கொள்ளையடிக்கின்றனர். காவிரி ஆற்றில், மணல் அள்ள கட்டுபாடுகள் அதிகரித்ததைதொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பெங்களுர் வரை, மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் 4 ஆயிரத்திற்கு விற்ற மணல் யூனிட் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. ஆனாலும் மணல் கிடைப்பதில்லை. காவிரி கரையோரம் மாட்டு வண்டியில் கொண்டு வரப்படும் மணல் அதிக விலைக்கு கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகிறது.இதனால் உள்ளுர் ஓடை, வயல்பகுதியில் உள்ள மணலை அள்ளி உள்ளுர் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அடுத்த காட்டூர் பகுதியில் ஓடை செல்லும் வழிதடங்களில் மணல் தாரை அதிகளவு உள்ளது.மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மணல் அதிகளவு காணப்படுகிறது. எனவே இவர் வயலில் இருந்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறார். ஒரு டிராக்டர் மணல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார், 4 ஏக்கர் சுற்றளவில் உள்ள இவரது தோட்டத்தில், பல இடங்களில், 15 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர். இது குறித்து வருவாய்துறையினருக்கு,இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாரத்தில் 4 நாட்களுக்கு மணல் அள்ளும் கொள்ளையர்கள் சில நாட்கள் மணல் அள்ளுவதை நிறுத்தி விடுகிறார். கடந்த 2 வருடங்களாக இந்த மணல் கொள்ளை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல், தொப்பப்பட்டி, வேலம்பாளையம், ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இது குறித்து கட்டிட காண்டிராக்டர்கள் கூறியதாவது: ஆற்று மணலில் வீடு கட்டுவது பலமாக இருக்கும். ஆனால் இதுபோல் ஓடை மற்றும் வயலில் எடுக்கப்படும் மணலில் மண் அதிகமாக கலந்திருக்கும்.இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கும்,எதிர் காலத்தில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது தெரியாமல் பொதுமக்கள் மணல் என்று அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். அவர்களுடைய அறியாமையை, மணல் கொள்ளையர்கள் பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டுகின்றனர். இதனை வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : garden ,area ,Namagiripet , Namagirippettai, sand, sale
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!