காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ஆசாமிக்கு ஓடஓட அரிவாள் வெட்டு: தப்பிய கும்பலுக்கு வலை

சென்னை: காங்கிரஸ் கட்சி பிரமுகர் அப்பாஸ் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளியை பழிதீர்க்க ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி துலுக்கான தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அப்பாஸ் (42). இளைஞர் காங்கிரஸ் மத்திய சென்னை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரை கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இரவு திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில் உயிரிழந்த முகமது தாஜூதீன் அப்பாஸ் நண்பரான இம்ரான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செசய்தது தெரியவந்தது. பின்னர் முக்கிய குற்றவாளியான இம்ரான் நாகை நீதிமன்றத்தில் ஆஜரானார். மீதமுள்ள பிலால் உட்பட 7 பேரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அப்பாஸ் கொலை குற்றவாளிகளான பிலால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட அப்பாஸ் தரப்பினர் ஜாமீனில் வெளி வந்தவர்களை பழிதீர்க்க முடிவு செய்து அவர்களை பின்தொடர்ந்து நோட்டமிட்டுள்ளனர். நேற்று ராயப்பேட்டை மீசா பெட் மார்க்கெட்டுக்கு பிலால் தனியாக வந்துள்ளார்.

இதை அறிந்த அப்பாஸ் தரப்பு கும்பல் சுற்றி வளைத்து பிலாலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பிலால் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் பின்தொடர்ந்து சென்றனர். தகவலறிந்து இம்ரான் தரப்பினர் சம்பவ இடத்துக்கு வந்ததை பார்த்த அப்பாஸ் தரப்பு கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. தகவலறிந்து, ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், மீசாபேட்டை மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து பார்த்தபோது பிலாலை வெட்டிய நபர்கள் உயிரிழந்த அப்பாஸின் உறவினரான ஷேக் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிதீர்க்க பிலாலை கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இரு தரப்பு கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர். மேலும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அனைவரும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Assam , Congressman murder, assimilation, runoff, cut
× RELATED கடலூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம்...