×

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ரயில்வே பணியில் அமர்த்த தடை கோரிய வழக்கு : தெற்கு ரயில்வே மேலாளர் பதிலளிக்க உத்தரவு

மதுரை : தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ரயில்வே பணியில் அமர்த்த தடை விதிக்க கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மணவாளன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் தென்னக ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேயின் இணைப்புகளில், குறிப்பாக தென்னக ரயில்வேயில் தமிழ் தெரியாதவர்களை அதிகமாக பணியமர்த்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15-20% பேர் தமிழ் தெரியாதவர்கள். இவர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தென்னக ரயில்வேயால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டு வருகிறது

இவ்வாறு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் நபர்கள் தென்னக ரயில்வேயில் பணியமர்த்தப்படுவதால் இவர்களுக்கு ரயில்வே துறையில் பணியாற்றும் போது போதிய தகவல் பரிமாற்றம் கிடைப்பதில்லை. தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் ரயில் நிலைய அதிகாரி, ஓட்டுநர், கார்டு உள்ளிட்ட பணிகளில் உள்ளனர். மதுரையில் கடந்த 8ம் தேதி மதுரையில் இருந்து திருமங்களம் மற்றும் திருமங்களம்-மதுரை செல்லக்கூடிய இரண்டு ரயில்கள் கள்ளிக்குடி அருகே ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் சென்றது. இதுகுறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பாதிவழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் முக்கிய பதவிகளில் தமிழ் தெரியாதவர்களை நியமனம் செய்யக்கூடாது என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜூன் 6ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Southern Railway Manager ,Tamil Nadu ,Tamil Railways ,government , Tamil Nadu,Tamil strangers,Railway work,Southern Railway
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...