×

ஈரோடு அரசு மருத்துவமனையில் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு: நோயாளிகள் அவதி

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்தும் தினமும் 750க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுதவிர, 700 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே உள்ள செப்டிக் டேங்க் கடந்த சில நாட்களாக நிரம்பி கழிவுகள் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதாகவும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சரி செய்யப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகள் தரப்பில் கூறுகையில், `மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் அருகில் பெரிய அளவிலான செப்டிக் டேங்க் உள்ளது. இதில், இருந்து கழிவுகள் அப்படியே வெளியேறி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகின்றன. வார்டுகளில் தங்கி இருக்க முடிவதில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை. மேலும் அருகிலேயே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Erode State Hospital , Erode, Government Hospital
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...