×

முல்லை பெரியாறு வாகன நிறுத்துமிடம் விவகாரம் கேரளா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உத்தரவை மீறுவதாக உச்ச நீதிமன்றத்தில் புகார்

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டும் வழக்கு விவகாரத்தில் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கேரளாவை சேர்ந்த தங்கப்பன், ஆப்பிரகாம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் மனு தாரராக இணைந்தது. இதில்,”கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்காக தேர்வு செய்துள்ள இடமானது தேக்கடி வனப்பகுதியை சேர்ந்தது. இதனால் அங்கு கார் பார்க்கிங் அமைத்தால் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

இதைத்தவிர மேற்கண்ட இடம் தமிழக அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்பதோடு அந்த இடம் முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியென வழக்கில் குறிப்பிடப்பட்டது. வழக்கை விசாரித்த தென்மண்டல தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் கடந்த விசாரணையில் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டும் வழக்கில் இரு மாநில அரசின் கோரிக்கைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என்றும், இது தொடர்பாக இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது.

இதேப்போல் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு தரப்பில் ஏற்கனவே கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்களை நீக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களுக்கும் அணையின் பாதுகாப்பு கருதி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வழக்கு விசாரணையில் இறுதி உத்தரவு வரும் வரை முல்லை பெரியாறு பகுதியில் புதிய கட்டிடங்களை கட்டக்கூடாது என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலோடு கூறிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,” கேரள அரசு தொடந்து அணைப் பகுதியில் நிரந்தர கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்; கேரளா அரசு மீது தகுந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு கேரளாவின் செயல்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னதாக இந்த வழக்கில் இருந்து நீதிபதி கே.எம்.ஜோசப் தாமாக முன்வந்து விசாரணையில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mullaperiyar ,Tamil Nadu ,court , Mullai Periyar, parking lot, affair, contempt case, Supreme Court, complaint
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு