×

நெல்லையில் நெகிழ்ச்சியான சம்பவம்: காயமடைந்த டிரைவருக்கு கலெக்டர் உதவியுடன் கட்டுபோட்ட எஸ்.பி.

நெல்லை: நெல்லையில் பள்ளி வாகன சோதனையின்போது டிரைவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். உடனடியாக போலீஸ் எஸ்பி அவரது கையில் பேண்டேஜ் கட்டு போட்டு சிகிச்சை அளித்தார். அவருக்கு பெண் கலெக்டரும் உதவியாக இருந்தார். இந்த பரபரப்பு காட்சிகள் பேஸ்புக்கில் வைரலாக பரவிக்கொண்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 1153 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆண்டுதோறும் சோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். இதுபோல் இந்த ஆண்டும்
கடந்த 11ம்தேதி (சனிக்கிழமை) நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் சோதனைக்காக  பள்ளி வாகனங்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. சோதனையிடுவதற்கு முன் அனைத்து டிரைவர்களையும் முன்நிறுத்தி கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆகியோர் அவர்களுக்கு வாகனம் ஓட்டும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றி அறிவுரை வழங்கினர். அதன்பிறகு ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வாகனத்தில் கலெக்டர், எஸ்பி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்ளிட சிலர் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் அவசரகால கதவு சரியாக இயங்குகிறதா என பார்ப்பதற்காக அதன் டிரைவரை கதவை திறக்கும்படி கூறினர். அவர் தம்கட்டி திறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்த கதவின் கம்பி டிரைவர் கைவிரலை கிழித்துவிட்டது. உடனே ரத்தம் பீறிட்டு வரவே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  ஆனால் எஸ்பி அருண்சக்திகுமார், ஒன்றும் பயப்படவேண்டாம். சிறிய காயம்தான்... நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதோடு அந்த வாகனத்தில் இருந்த முதலுதவி பெட்டியை திறந்து அங்கிருந்த பஞ்சு, பேண்டேஜ், டெட்டால் ஆகியவற்றை எடுத்தார். பஞ்சால் ரத்தத்தை துடைத்தபின் டெட்டால் போட்டு பேண்ேடஜால் ரத்தம் வந்த இடத்தில் சுற்றினார். வாகனத்தின் உள்பகுதியில் வைத்தே இந்த சிகிச்சை நடந்தது. பேண்டேஜை கத்திரிகோலால் வெட்டும்போது கலெக்டர் ஷில்பாவும் எஸ்பிக்கு உதவி செய்தார். சிகிச்சை முடிந்தபின், எஸ்பி, அந்த டிரைவரிடம் ஒன்றும் ஆகாது ஓரிருநாட்களில் காயம் ஆறிவிடும் என்று கூறினார்.

இந்த தகவல் அங்கிருந்த மற்ற டிரைவர்களுக்கு தெரியவந்ததும் அவர்களும் அங்கு திரண்டு வந்தனர். அப்போது கலெக்டர் டிரைவர்களை பார்த்து, உங்க எஸ்பி சாதாரண ஆள் இல்லே... அவரும் மருத்துவம் படித்தவர்தான். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி இப்போது மருத்துவ சேவையும் செய்துள்ளார் என்று புன்சிரிப்புடன் கூறினார். உடனே டிரைவர்கள் ஒட்டுமொத்தமா, நாங்களும் பலமுறை வாகன சோதனைக்கு வந்திருக்கிறோம். இதுபோன்று யாரும் அன்புடன் நடந்துகொண்டதில்லை. தவறுகளையும் நயமாக சுட்டிக்காட்டி அதை நிவர்த்திக்கும்படி கூறியதை இப்போதுதான் பார்க்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் காயமடைந்த டிரைவரிடம், உங்க வாகனத்தில் அவசரகால கதவை சரி செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த காட்சிகள் தற்போது பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

இருதய நிபுணரான எஸ்.பி.யின் அறிவுரையும், அதிரடியும்!:

பள்ளி வாகன டிரைவரின் காயத்திற்கு கட்டு  போட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஒரு இருதய நிபுணர் என்பது பலபேருக்கு  தெரியாது. அவர் மருத்துவர் என்பதால் சில மாதங்களுக்கு முன் நெல்லை  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும்  வாட்ஸ் அப் செய்தி  அனுப்பியிருக்கிறார். அதில், காவல் துறையில் பணியாற்றும் நீங்கள்  மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உங்களில்  யாருக்காவது நோய் தாக்கம் இருந்தால் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம்  குணமாக்கி
விடலாம். சாதாரண நோய்தானே என்று இருந்து விடாதீர்கள் என்று  காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.  இதுபோல் சுரண்டை காவலர்கள் இருவர் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த இரு காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தார். தொடர்ந்து மேல் நடவடிக்கையாக இரு காவலர் மற்றும் ஒரு பெண் காவலர் ஆகிய 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய கலெக்டர்:

இதுபோல் கலெக்டர் ஷில்பா, ஒரு மாதத்திற்கு முன் வள்ளியூர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கார் விபத்தில் சிக்கி தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் காயமடைந்து தவித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கலெக்டர், அதனை கண்டதும் காரில் இருந்து இறங்கி அந்த தம்பதிகளை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, அந்த தம்பதியின் மகளை தனது காரிலேயே ஏற்றி ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
அதன்பிறகுதான் வள்ளியூர் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார். இதுபோல் எந்த நேரத்தில் எந்த சம்பவம்  நடந்தாலும் முதல் ஆளாக கலெக்டர் ஆஜராகி நடவடிக்கை எடுத்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : incident , Nellai, Flexible Event, Driver, Collector Assistant, SB
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...