×

வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கிய உரிமங்களை ரத்து செய்யவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேற்றப் பட்டால் ஏற்கனவே நிலத்தடிநீர் குறைந்து தண்ணீர்ப் பற்றாக்குறையில் தவிக்கும் விழுப்புரம், புதுவை பகுதிகளில்  குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும். இந்த திட்டத்துக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு வாய் மூடி மவுனம் காக்கிறது. இது கண்டனத்துக்குரியதாகும். இந்த ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடையில்லா  சான்றிதழ் வழங்க மாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த உரிமங்களை ரத்து செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை  ஆரம்பித்து அந்தப் பகுதியையே நாசமாக்கி மக்களின் உயிர்களைக் குடித்து பேரழிவை ஏற்படுத்திய வேதாந்தா நிறுவனம் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளையும் சுடுகாடு ஆக்குவதற்கு மோடி அரசு வழிவகுத்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளின் பினாமியாக செயல்படும் மோடி அரசு ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அவசரமாக வேதாந்தாவுக்கு உரிமங்களை வழங்குகிறது. மோடி அரசின் இந்த  மக்கள்விரோத நடவடிக்கைக்கு  தமிழக அரசு துணைபோனால் அதற்கான அரசியல் விலையை தர நேரிடும். இவ்வாறு கூறியுள்ளார்

Tags : Thirumavalavan ,company , Vedanta, Thirumavalavan, assertion
× RELATED சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக...