×

ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரையை பதிப்போம்: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு  எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்நாளும் சோர்வில்லை நமக்கு. எப்போதும் சுணக்கமில்லை நம் பணியில். ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பயணங்கள். ஓய்வே இல்லாமல் பரப்புரைகள் - எல்லா ஊர்களிலும் பொதுமக்களுடன் சந்திப்பு, நேரடியாக உரையாடல் - வாக்கு சேகரிப்பு என மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகும், களத்திலேயே நிற்கிறோம். காரணம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அதிமுக ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

கூடுதலாக, மே 19ம் தேதி நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது. அதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவுதான், மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் மர்மமான முறையில் ஓர் அதிகாரி நுழைந்தது முதல், தேனி - ஈரோடு எனப் பல இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் வரையிலான அனைத்து மறைமுக செயல்பாடுகளுமாகும். ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை திமுக, தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி தனது ஆட்சியின் 5 ஆண்டுகால சாதனைகள் என நெஞ்சுயர்த்திச் சொல்வதற்கு எதுவுமில்லாத காரணத்தால், முன்னாள் பிரதமர்கள் பண்டித நேரு, ராஜீவ்காந்தி ஆகியோர் மீது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பழிபோட்டுப் பரப்புரை செய்கின்ற பரிதாபகரமான நிலையைப் பார்க்க முடிகிறது. எல்லாமும் ஏற்படப் போகும் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். பாசிச பாஜ ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அதிமுக ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்துவிட்ட நிலையில், மத்தியில் பாஜ அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.

அத்துடன், 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் புதிய ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவிற்கும் அதன் தலைமையிலான கூட்டணிக்கும் இருக்கிறது. நம்மைவிட அதிகமான ஆர்வத்துடன் வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள்.

மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 4 தொகுதிகளிலும் இரண்டு கட்டங்களாகப் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆர்வம் மிகுதியுடன் ஓடோடி வந்து, கைகளைப் பற்றிக்கொண்டு, கனிவுடன் ஆதரவளிக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை திமுகவினால்தான் உருவாக்க முடியும் என்பதை உரக்கச் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் இத்தனை ஆர்வமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்பதை ஒவ்வொரு தொகுதியின் பயணத்திலும் அறிந்துகொள்ள முடிந்தது.

கோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள். அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. ஒரு குடம் குடிநீர் தர வக்கற்ற ஆட்சி நீடிப்பதை வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள்? விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்கிற நயவஞ்சக ஆட்சியாளர்களை நம்புவதற்கு தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.

எனவே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளிலும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் கண்ணிமைக்காமல் கடமையாற்ற வேண்டிய நேரம் இது. தோழமைக் கட்சியினரின் துணையுடன் வாக்கு சேகரிப்பு பணிகள் வீதி வீதியாக, வீடு வீடாக, ஒவ்வொரு வாக்காளராக நடைபெற வேண்டும். வாக்குப்பதிவு நாளிலும் அதிக கவனம் வேண்டும். மக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம் - புதுவை மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க - 100 சதவீத வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டுகிறேன்.

இது 4 தொகுதிகளைச் சார்ந்த கட்சி நிர்வாகிகள் - தேர்தல் பொறுப்பாளர்கள் -தொண்டர்கள் மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள தொண்டர்களும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம். நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள்.

மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும். ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23க்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும், மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது.

Tags : midterm election ,volunteers ,MK Stalin , Make a change of regime, make a seal, MK Stalin's volunteer, letter
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...