×

சோழவந்தான் அருகே கரம்பை மண்ணில் உருவாகி கலைநயம் பேசும் சிலைகள்

* பாரம்பரியத்தை தொடரும் முதியவர்

சோழவந்தான் :  சோழவந்தான் அருகே கரம்பை மண்ணில் கோயில் நேர்த்திக்கடன்களுக்கு பொம்மைகள், சிலைகள் செய்யும் பாரம்பரிய தொழிலை முதியவர் பாதுகாத்து வருகிறார். இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாகரீகம் எனும் பெயரில் பல மாற்றங்கள் வந்தாலும் ஆங்காங்கே நமது முன்னோர்களின் தொழில், பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக முன்பெல்லாம் ஏழைகளின் உணவு என கூறப்படும் கம்மங்கூழ், கேப்பைக்கூழ், தானியங்கள் உள்ளிட்டவை இன்று உடல் ஆரோக்கியத்திற்காக பணக்காரர்களின் உணவாகி மாறி வருகிறது.

ஏன் ஏழைகளின் தின உணவு பட்டியலில் இப்போது வரை இருக்கும் பழைய சோறு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒரு ஓட்டலில் ரூ.50க்கு ஜிஎஸ்டி வரியுடன் விற்கப்படுகிறது. இதனை பலரும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இப்படி பலவற்றை சொல்லி கொண்டே போகலாம். இதுபோல் தொழிலும் மாறி கொண்டே வருகிறது.
‘அலுப்பில்லாமல் வேலை செய்யணும்... அளவில்லா பணம் சம்பாதிக்கணும்...’. இதுதான் இக்காலத்தில் பலர் தேர்ந்தெடுக்கும் தொழிலாகி விட்டது. இச்சூழலிலும் அன்றாட உணவுக்கே வருவாய் கிடைக்குமோ என்ற வறிய நிலையிலும், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே துவரிமானில் முதியவர் பாலுச்சாமி, குலத்தொழிலாக கோயில்களுக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் பொம்மைகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து பாலுச்சாமியிடம் கேட்டபோது, ‘‘இது என் தாத்தா பெரிய கருப்பன் வழியில் வந்த பரம்பரை தொழிலாகும். கோயில்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கேட்கும் தவழும், நிற்கும் குழந்தை, கால்பாதம், கைபாதம், ஆண், பெண் உருவங்கள், அக்னிசட்டி, ஆயிரங்கண் பானைகள செய்து கொடுப்பேன். இதுபோல் கருப்புச்சாமி, பேச்சியம்மன், ராக்காயி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தூக்கி செல்லும் குதிரை சிலைகளும் கேட்பாங்க.. செய்து கொடுப்பேன்’’  என்றார்.

மேலும் இதில் என்ன லாபம் கிடைத்து விட போகிறது என கேட்டபோது, ‘‘பணம் என்னய்யா.. பணம்... நோய் இல்லாத வாழ்க்கை, பசிக்கு சாப்பாடு. எங்கள் கைகளால் செய்த பொம்மைகள், சிலைகளை கோயிலில் வைத்து வழிபட்டதால் வேண்டுதல் நிறைவேறியிருச்சுனு பக்தர்கள் மனநிறைவா சொல்வாங்க.. இதை விட என்ன மகிழ்ச்சி வேண்டும்’’ என்றார் வெள்ளந்தி புன்னகையுடன்.

alignment=



இந்த கால பிள்ளைகளுக்கு பொறுமை இல்லைய்யா?
பொம்மைகள் செய்வது எப்படி என கேட்டபோது, ‘‘கரம்பை மண்ணை அள்ளி முதல்ல தண்ணீர்ல ஊற வைக்கணும். மறுநாள் சலித்த குறுமணலை சேர்த்து இதமாக பிசைந்து, அந்தந்த உருவங்களுக்குரிய மோல்டுக்குள் இடைவெளி இல்லாமல் அழுத்தி வைத்து அடைத்து சிறிது நேரம் கழித்து எடுக்கணும். ஒரு வாரம் காயவைத்து  பின்னர் தீயில் வேக வைத்து, சூடு தணிந்த பின் பெயின்ட் அடித்து அதன்பின் விற்கணும். இதை செய்யுமளவு இந்த கால பிள்ளைகளுக்கு பொறுமையும் இல்லை. பாரம்பரிய தொழிலை பாதுகாக்கணுங்கிற அக்கறையும் இல்லை...’’ என்றார் பாலுச்சாமி.


Tags : Cholavanthan ,Karambai , cholavanthan,art ,Karambai
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’