×

நாட்றம்பள்ளி அருகே பாதாள அறையில் செயல்பட்ட போலி மது ஆலை கண்டுபிடிப்பு: 3 பேர் கைது; கார், மதுபாட்டில்கள் பறிமுதல்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே பாதாள அறையில் செயல்பட்ட போலி மதுபான ஆலையை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதிக்கு கடத்திச்சென்று விற்பதாக மத்திய புலனாய்வு மற்றும் மதுவிலக்கு அமலாக்கபிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்படி, அனைத்து பிரிவு போலீசாரும் கடந்த 3 தினங்களாக  மத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அதில், 3 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தன. அதனை சோதித்து பார்த்தபோது போலி மது என தெரியவந்தது. இதையடுத்து  காரில் வந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி கும்மிடிகான்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன்(25), கண்ணாலப்பட்டி கோவிந்தராஜ்(60), கவுண்டப்பனூர் சரவணன்(36) என தெரிந்தது. இவர்கள் நாட்றம்பள்ளி பகுதியில்  போலி மது தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, 3 பேர் அளித்த தகவலின்படி, நேற்று அதிகாலை நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூர் பகுதிக்கு அவர்களை அழைத்து வந்தனர். அங்கு சரவணனுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டியிருந்த  குடோனை திறந்து பார்த்தனர். அங்கு சில பேரல்கள்  கிடந்தன. சந்தேகத்துடன் அறையில் உள்ள தண்ணீர் தொட்டி மீது இருந்த மூடியை திறந்து பார்த்தனர்.
அப்போது, தண்ணீர் தொட்டிபோல் இருந்த இடத்தில் ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு உள்ளே அறை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அதற்குள் இறங்கி பார்த்தபோது போலி மதுபான ஆலை இயங்கி வந்தது  தெரிந்தது. மேலும் அங்கு 720 மதுபாட்டில்கள், காலி பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்த வேலூர் மதுவிலக்கு ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி, டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர், மனோகரன், கோவிந்தராஜ், சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கார்,  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறு ஒருவருடன் கூட்டுச்சேர்ந்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்ததும், கடந்த 2 மாதங்களாக தனியாக பிரிந்து வந்து நாட்றம்பள்ளி ஏரியூரில்  பாதாள அறை அமைத்து போலி மது தயாரித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களுடன் வேறு யார் யார் தொடர்பில் உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : alcohol factory ,Nathurampalli Car , Nathurampalli,cellar, factory discovery, liquor seizures
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...