×

பெரம்பூர் ரயில்நிலையத்தில் மோதல் பெண் இன்ஸ்பெக்டர், காவலர் மாற்றம்

சென்னை:  பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக  நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட  எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பல எக்ஸ்பிரஸ்கள் நின்று செல்கின்றன. இங்கு தினந்தோறும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில்  நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்கவும்,  விபத்து குறித்து   விசாரணை நடத்தவும் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பெண் காவலர்கள் உள்பட 25க்கு மேற்பட்ட போலீசார்  பணியாற்றி வருகின்றனர். பெரம்பூரில் இருந்து அம்பத்தூர் வரை  நடக்கும் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகள் குறித்து பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெரம்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி ராஜாமணிக்கும், அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் சாந்திக்கும் ஊழியர்களை பணிக்கு அனுப்பும் விவகாரத்தில்  மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஆய்வாளரும் பெண் காவலரும் தனித்தனியாக வீடியோ எடுத்து அதனை ஒவ்வொன்றாக வெளியிட்ட காரணத்தால்  காவல்துறைக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் பொதுமக்களுக்கும் தெரியவந்தது.  வீடியோ காட்சிகளை பார்த்த ரயில்வே மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி நடந்து கொண்டால் மக்களை யார் பாதுகாப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவம் நடைபெற்ற அன்று பணியில் இருந்த ஆய்வாளர் அருள்ஜோதிமணி, ராஜாமணியை காத்திருப்போர் பட்டியலுக்கும்    பெண் காவலர் சாந்தியை அரக்கோணம் காவல் நிலையத்துக்கும்  மாற்றம் செய்தனர். மேலும், பணியில் இருந்த 4 காவலர்களும் வேறு வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.  மேலும் காவலர்களுக்கும் பொதுமக்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கும் இடையே சண்டை ஏற்படும்.  இந்த வழக்கம் மாறி தற்போது பெண் காவலருக்கும் ஆய்வாளருக்கும்  மோதல் ஏற்பட்ட சம்பவம் சமூக வலை தளத்தில் பரவியதால்  ரயில் பயணிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் ஒரு வித பாதுகாபின்மை ஏற்பட்டுள்ளது.  இச்சம்பத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தது  குறிப்பிடத்தக்கது.



Tags : Conflict Girl Inspector ,railway station ,Perambur , Girl Inspector, Guard Transfer, Perambur railway station
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!