×

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பிரபலமான ஆசிரியர் பகவான் மீது காவல்நிலையத்தில் புகார்: 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

திருவள்ளூர்: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பிரபலமான ஆசிரியர் பகவான் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜப்பேட்டையைச் சேர்ந்தவர் பகவான். இவர் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் பகவான். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்காக விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர். இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மாணவர்கள்-ஆசிரியரின் பாசப்போராட்ட வீடியோ வைரலானது. பல்வேறு ஊடகங்களும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்து செய்திகள் வெளியிட்டன.

எனவே, சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் உட்பட பலரும் ஆசிரியர் பகவானை பாராட்டினர். சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை அவரை போலீசார் கைது செய்து திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆசிரியர் பகவான், வெள்ளியகரம் ஊரைச்சேர்ந்த நாதமுனி என்பவர் மகள் கவிதாவை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், ஆசிரியர் பகவானின் வீட்டார் மற்றும் புகாரளித்துள்ள வீட்டார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, ஆசிரியர் பகவான் வழக்காக பதிவு செய்யப்படுமா அல்லது புகார் வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து பின்பு தெரியவரும். எனினும், ஆசிரியர் பகவான் மீதான புகாரால், பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.



Tags : teacher , Author lord, marriage fraud, police station, complaint
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...