×

இன்று மாலையுடன் 6ம் கட்ட பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி: நாளை மறுநாள் 59 தொகுதிகளில் நடைபெறும் 6ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை முடிகிறது.  மக்களவைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. வருகிற 19ம் தேதி 7வது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இதுவரை 5  கட்ட தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுநாள் 6வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பீகார், மேற்கு வங்கத்தில் தலா  8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, உத்தரப் பிரதேசம் 14, டெல்லியில் 7 தொகுதிகளில் என மொத்தம் 59  தொகுதிகளில்  6வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது. தேர்தலுக்கான ஏற்பாடு முழு வீச்சில்  செய்யப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை முடிந்துள்ள 5 கட்ட தேர்தல்களில், ஆந்திராவை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. காஷ்மீர் மாநிலத்தில்  கூட தேர்தல் அமைதியாகவே நடந்து வருகிறது. இந்த 59 தொகுதிகளில் 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜ 44 இடங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் 59 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களை கைப்பற்றியது. உத்தரப்  பிரதேசத்தில் 14 மக்களவை தொகுதிகளும் பாஜ வசமானது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இவற்றில் பெரும்பாலான இடங்களை பாஜ இழக்கும் என கருதப்படுகிறது.



Tags : Today ,evening, The 6th , propagating
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...