×

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்: விடுதலையை எதிர்த்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மாநில ஆளுநர் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.    
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு; 161வது சட்ட விதியின் கீழ் இந்த விவகாரத்தில் அவர் தான் இறுதி முடிவை எடுப்பார் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக இன்னும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதில் மேற்கண்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில்,”ராஜீகாந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒரு தீர்க்கமான பதிலை வெளியிட வேண்டும்.

இல்லையேல் அரசியல் சாசனம் 435வது சட்ட விதியில் மாநிலத்திற்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசே அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் மேற்கண்ட தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டே மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மேற்கண்ட மேல்முறையீட்டு மனுவானது கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவில் சில திருத்தங்களை செய்து கூடுதல் ஆவணங்கள் மற்றும் தற்போதைய அமைச்சரவையின் தீர்மானம் ஆகியவைகளை ஒன்றாக இணைத்து புதியதாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசும் கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், “7 பேர் விடுதலை தொடர்பாக எந்த ஒரு மனுவும் மத்திய அரசிடம் நிலுவையில் கிடையாது. இதுகுறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு பதில் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டது.
 
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, தீபக்குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.

தலைமை நீதிபதி உத்தரவில்,” பேரறிவாளன் உட்பட 7பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை. மேலும் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. இந்த விடுதலை விவகார வழக்கை பொருத்தமட்டில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதனால் அவரது முடிவே இந்த விவகாரத்தில் இறுதியானது என தெரிவித்த நீதிபதிகள் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

9 மாதம் வேஸ்ட்   

பேரறிவாளன் உட்பட 7பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விடுதலை தொடர்பாக ஆளுநர் தான் தாமதப்படுத்துகிறார். அதற்கான அழுத்தத்தை நாங்கள் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். மேலும் எங்கள் மீது எந்தவித தவறும் கிடையாது என தமிழக அரசு ஏதாவது காரணத்தை சொல்லி தப்பித்து வருகிறதே தவிர விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் காலத்தை மட்டும் கடத்தி வருகிறது. இது தான் நிதர்சனமான உன்மையாகும். இதனால் மேற்கண்ட விடுதலை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு மொத்தம் 344 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 9 மாதங்கள் வீனானது மட்டும் தான் மிச்சம் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : governor ,release ,perpetrator ,Supreme Court , Periyalavanan, 7 persons release affair, governor, the Supreme Court
× RELATED வெயிலில் வேலை பார்க்கும்...