×

பாதாள சாக்கடை இணைப்பு குழாயில் வெளியேறும் கழிவுநீர்: ஈரோட்டில் பொதுமக்கள் அவதி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடையுடன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் பாதாள சாக்கடையில் செல்லாமல் ஆங்காங்கே வெளியேறி வருகிறது. இதனால்  பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.ஈரோடு மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளை ஒருங்கிணைத்து கடந்த 2010ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 5 பகுதிகளாக பிரித்து நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணியில்  இதுவரை 4 பகுதிகள் முடிக்கப்பட்ட நிலையில் 2வது பகுதியில் மட்டும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீர்  குழாய்கள் பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.36.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீரை நேரடியாக செப்டிங் டேங்கிற்கு செல்லாமலும், சமையல் அறை, குளியல் அறைகளில் இருந்தும் வரும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்கவுள்ளனர்.  இதற்காக 2 தொட்டிகள் கட்டப்பட்டு அதில் இருந்து கழிவுநீர் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்படுகிறது. இந்த குழாயில் வரும் கழிவுநீர் அனைத்தும் பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக சுத்தம்  செய்யப்படவுள்ளது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் என 7 ஆயிரம் கழிவுநீர் இணைப்புகள் பாதாள சாக்கடையுடன் இணைத்துள்ளனர். இவ்வாறு பாதாள சாக்கடை குழாய்களில் கழிவுநீர் செல்லும்  வகையில் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆங்காங்கே பாதாள சாக்கடை இணைப்பில் இருந்து கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பாதாள சாக்கடைக்காக உள்ள இணைப்பில் இருந்து  கழிவுநீர் வெளியேறி வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் கழிவுநீர் அனைத்தும் ராட்சத குழாய்கள் மூலமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைத்துள்ளனர்.

ஆனால் இந்த திட்டம் முழுமையடையாத நிலையில் ஆங்காங்கே உள்ள பாதாள சாக்கடை இணைப்புகள் மூலமாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு  மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் வெளியேறும் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து விடுகிறது. இதனால் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாதாள  சாக்கடை திட்டம் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட ரோடுகளும் மோசமாக உள்ளது. இந்த நிலையில்  பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடையுடன் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் குழாய்களை இணைத்துள்ளனர்.

இதன் வழியாக கழிவுநீர் சென்று வரும் நிலையில் ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சூரம்பட்டி, நசியனூர் ரோடு உள்ளிட்ட  பகுதிகளில் பாதாள சாக்கடை குழாயில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இன்னும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் ஆங்காங்கே இணைப்பு குழாயில் சாக்கடைநீர் வெளியேறி வருகிறது. இந்த திட்டத்தை முழுமையாக  கொண்டு வரும்போது மாநகராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் ரோடுகளில் செல்லும் நிலைதான் ஏற்படும். மாநகராட்சி நிர்வாகம் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : population ,Erode , Sewer, connective tube, sewerage, civilian
× RELATED கோடைகால பாதுகாப்பு