×

கேரளாவில் ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் தேர்வு செய்த வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்த சம்பவத்தில் கத்தார் நாட்டின் தோகாவிற்கு தப்பிச் சென்றவரை என்ஐஏ அதிகாரிகள் கேரளாவுக்கு வரவழைத்து கைது செய்தனர். இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ்  தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த இயக்கத்தினருடன் கேரளாவைச் சேர்ந்த  சிலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதே போல் இலங்கை குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் கேரளாவில் மதப் பிரசாரம் செய்ய வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அவருடன் சில ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) பாலக்காடு  மற்றும் காசர்கோடு பகுதியில் உள்ள ஐஎஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை கைது  செய்தனர்.  கொச்சி சிறையில் அடைக்கப்பட்ட ரியாஸ் அபுபக்கரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கொல்லம் சங்ககுளங்கரை பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்பவருக்கு ஐஎஸ்க்கு ஆட்களை தேர்வு செய்வதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சமீபத்தில் கேரளாவில் இருந்து கத்தார் நாட்டில் உள்ள தோகாவுக்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் தோகா போலீசை தொடர்பு கொண்டு அவரை கேரளாவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தோகா போலீசார் முகமது பைசலை பிடித்து கொச்சிக்கு அனுப்பி வைத்தனர்.  

நேற்று கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர  விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் இறுதியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது.

Tags : Kerala ,IS , Kerala, IS organization, people selection, arrest of a young man
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...