தலைமை தேர்தல் அதிகாரி உதவியுடன் ஓபிஎஸ் மகனை வெற்றி பெற வைக்க வாக்கு இயந்திரங்களை மாற்ற சதி: ஈவிகேஎஸ். இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டு

தேனி: ஓபிஎஸ் மகன் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, தலைமை தேர்தல் அதிகாரியின் உதவியுடன் வாக்கு இயந்திரங்களை மாற்ற ஆளுங்கட்சியினர் சதி செய்வதாக, தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி தாலுகா அலுவலகத்திற்கு ரகசியமாக 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சர்ச்சை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவை தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையிலிருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம். தொகுதியில் இரண்டு, மூன்று வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகிறது. எந்த வாக்குச்சாவடியிலும், மறு வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். மாவட்ட கலெக்டர், இதை தலைமை தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனே அனுப்பும்படி நாங்கள் தெரிவித்ததற்கு, ‘தேர்தல் அலுவலகம் எங்களுக்கு அனுப்பியதை பத்திரமாக வைத்துள்ளோம். திருப்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்தால் திரும்ப அனுப்பி விடுவோம்’ என்றார் கலெக்டர்.
இந்த தேர்தலில் தனது மகன் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, வாரணாசி சென்ற ஓபிஎஸ், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து கெஞ்சி இருக்கலாம். இதனால் தலைமை தேர்தல் அதிகாரியின் உதவியுடன், இந்த வாக்குப்பெட்டிகளை மாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.

இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதி மக்கள் கொந்தளித்து விடுவார்கள். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஓபிஎஸ்சின் மகன் வெற்றி பெற முடியாது. ஓபிஎஸ்சும் பதவியில்
தொடர முடியாது.இவ்வாறு தெரிவித்தார். ஈவிகேஎஸ்.இளங்கோவனுடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலெக்டரை சந்தித்தனர்.


Tags : Chief Electoral Officer ,Observer ,Ilangovan , Chief Electoral Officer, OBS,: EVVES. Ilango, accusation
× RELATED விமானத்தில் கேரள தலைமை தேர்தல் அதிகாரியிடம் பணம் திருட்டு