×

உக்கடம், சுங்கம் மேம்பாலம் கட்டுமான பணி மந்தம்

கோவை: கோவை உக்கடம், சுங்கம் மேம்பாலம் கட்டுமான பணி மந்தகதியில் நடந்து வருகிறது. கோவை திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் ரூ.253 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாடப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம், 30 அடி அகலம், 3.6 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒருபுறம் திருச்சிரோடு அல்வேனியா பள்ளி அருகே நிறைவுபெறுகிறது. இன்னொருபுறம், திருச்சி ரோடு ஹைவேஸ் காலனி அருகே நிறைவுபெறுகிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு 120 தூண்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, முதல்கட்டமாக 6 தூண்களுக்கான பவுண்டேஷன் பணி நிறைவுபெற்றுள்ளது. இதேபோல், உக்கடத்தில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பாலம், 1.95 கி.மீ நீளத்துக்கு கட்டப்படுகிறது. முதல்கட்டமாக, 55 தூண்கள் அமைப்பதற்கான பணி நிறைவுபெற்றுள்ளது. இவ்விரு பாலம் கட்டுமான பணிகள் மந்த நிலையிலேயே நடக்கிறது.

கட்டுமான பணியையொட்டி, உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருச்சி ரோட்டிலும் இதே நிலைதான். இப்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், அடுத்த 18 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். முதலில், உக்கடம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும். அதன்பிறகு திருச்சி ரோடு மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ustadam ,construction work slowdown , Ukkadam, Sungam, Bridge, construction work
× RELATED உக்கடம் மேம்பால பணி: 250 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்