×

ஓட்டப்பிடாரத்தில் பிரசாரம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததால் இடைத்தேர்தல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓட்டப்பிடாரம்: அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததால் இன்று இடைத்தேர்தலை சந்திக்கிறோம் என ஓட்டப்பிடாரத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக வேட்பாளர் ஆளும் கட்சியின் வேட்பாளர். அவர் வெற்றி பெற்றால், எங்களிடம் குறைகளை எடுத்துச் சொல்லி நிறைவேற்ற  முடியும்.

  பேராசைக்காரர்கள் ஒரு சிலரால் தூண்டி விடப்பட்டு, அதிமுகவை உடைக்க வேண்டும். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தின்  அடிப்படையில் செயல்பட்டதின் விளைவு இன்று நடுரோட்டில் உங்களை வந்து சந்தித்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த தொகுதி வளர்ச்சியடைய  வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள். ஆனால், துரோகிகளுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்.  கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த தேர்தலை சந்திக்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட  வேண்டும்.

  உங்கள் உழைப்பால் ஜெயித்த வேட்பாளர் தனது  பேராசையின் காரணமாக வழி தவறிப் போனதால் வந்த விளைவு இந்த இடைத்தேர்தல். இந்த  தேர்தலில் அவரும் போட்டியிடுகிறார். அவருக்காக பிரசாரம் செய்ய டி.டி.வி.தினகரன் வருகிறார். கடந்த 2016 தேர்தலில் அவர் அதிமுக  உறுப்பினராக கூட இல்லை. ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும். ஓட்டப்பிடாரம் கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம்  உயர்த்துவோம். அதிமுக ஆட்சியில் கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக பெரிய அளவில் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 100க்கு 48 சதவீதம்  பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. கல்வித்துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக  திகழ்கிறது. சாலை வசதிகளை மேம்படுத்தவும் புறவழிச்சாலை திட்டம் கொண்டு வரவும் சீராக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் கிடைக்கவும் வழி காணப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Pratapgarh ,AIADMK ,Bye-elections , In Ottapidaram, Prasadam, Chief Minister Edappadi Palinasamy, speech
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...