×

கடன் சுமையால் முடங்கிப்போனது மீளுமா ஜெட் ஏர்வேஸ்? 10ம் தேதி தெரியும்: மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் கேள்விக்குறி

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் சுமையால் முடங்கிவிட்டது. அந்த நிறுவனத்தை மீண்டும் புதுப்பிக்க சில யோசனைகள்  முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை பரிசீலிக்கும் மன நிலையில் இந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் இல்லை என்பதுதான்  தற்போதைய நிலை. இருப்பினும், நான்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து பரிசீலனை செய்து மே 10ம் தேதி மாலைக்குள்  ஒரு முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் (சுமார் ₹8,325 கோடி) கடன் சுமையால் கடந்த மாதம் முடங்கிவிட்டது. இதையடுத்து, தனது  அனைத்து விமான சேவையை நிறுத்திவிட்டது. விமான நிறுவனத்திற்கு பொருள்கள் சப்ளை செய்தவர்கள், பைலட்கள், எண்ணெய் நிறுவனங்கள்  ஆகியவைகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அதிக அளவில் கடன் கொடுத்தவர்கள், தங்கள்  கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளை விற்று கடன் தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், எதிஹாட் ஏர்வேஸ், டிபிஜி கேபிட்டல், இன்டிகோ பங்குதாரர்கள், என்ஐஐஎப் ஆகியவை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும்  செயல்பட வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன. 9 நிபுணர்கள் அடங்கிய குழுவினர் புதிய யோசனைகளுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க  முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பதை இந்த விமான நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ள முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி  ஆகியவற்றை இந்த குழுவினர் அணுகியுள்ளனர். இந்த மூன்று வங்கிகள் உள்பட 9 வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளன.  விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதலில் நிறுவனத்தை செயல்பட வைக்க தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி  மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கடன் கொடுத்த வங்கிகளிடமே மீண்டும் கடன் பெற்று நிறுவனத்தில் முதலீடு செய்வது என்றும், அடிக்கடி விமான  பயணம் மேற்கொள்பவர்கள் மூலம் நிதி ஆதாரத்தை அதிகரிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். கடன் சுமையால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்றால் புதிதாக நிதி முதலீடு செய்தால்தான்  முடியும் என்ற நிலையில், சில விமான சேவை நிறுவனங்களும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகக்  கூறப்படுகிறது.

 ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை  குறைவாக வைத்துள்ளவர்களின் சார்பில் நிபுணர்கள் குழு பிரச்னைக்கு தீர்வு  காணும் முயற்சியில்  இறங்கியுள்ளது. நிபுணர் குழுவில்  இடம்பெற்றவர்களில் சிலர், கடந்த காலத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில்  அடிக்கடி பயணம் செய்தவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. 8,325 கோடி கடன் சுமையால் முடங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமான சேவையை கடந்த மாதம் நிறுத்திவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The debt burden, crippled, jet airways, question mark
× RELATED கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட...