×

சுசீந்திரம் கோயிலில் இன்று மழை வேண்டி வருண யாகம்: நந்தி பகவானுக்கு தொட்டி கட்டி நீர் நிரப்பி பூஜை

சுசீந்திரம்:  சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் அறநிலையத்துறை  அதிகாரிகள் உத்தரவின் படி, மழை வேண்டி இன்று காலை  சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன.  தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோவில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. கோயில்களில் உள்ள நந்தியை சுற்றி தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களுடன் அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிவாலயங்களில் சிவனுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் வழிபாடு செய்யவும், விஷ்ணு கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் செய்யவும் அறநிலையத்துறை அறிவுறுத்தி இருந்தது. மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யுமாறும்,  வருண காயத்ரி, வருண சூக்த வேத மந்திரங்களை பாராயணம் செய்யவும் அறிவுரை வழங்கி இருந்தனர். மேலும் ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறை ஓதுதல் மற்றும் பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து அபிஷேகம் நடத்துதல் போன்றவற்றிற்கும் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் படி சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் இன்று மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் உள்ள மயில் மண்டபத்தில் மழை வேண்டி தீ வளர்த்து வருண யாக பூஜை நடத்தப்பட்டது.

சிவாச்சாரியர்கள் யாக பூஜையை நடத்தினர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்திர விநாயகருக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கு தொட்டி கட்டி அதில் கழுத்து வரை நீர் நிரப்பி, ராமச்சன் வேர் அதில் போட்டு பூஜைகள் நடந்தன. இதில் இணை ஆணையர் அன்புமணி, அறநிலையத்துறை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், சுசீந்திரம் கோயில் மேலாளர் சண்முகம் பிள்ளை, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சோணாச்சலம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் கோயிலில் மட்டும் இந்த சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rainy Yagam ,Nandhi Bhagavan , Suchindram Temple, Rain, Varuna Yagam, Nandi Lord, Pooja
× RELATED மழை வேண்டி நந்தி பகவானுக்கு வருணஜப பூஜை