×

சென்னையில் 102 டிகிரியை தாண்டியது வெயில் ‘ஏசி’ பஸ்கள் மீண்டும் ஓடுமா? ‘எம்டிசி’ நிர்வாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

சென்னை: சென்னையில் 102 டிகிரியை வெயில் தாண்டிவிட்ட நிலையில், மீண்டும் ‘ஏசி’ பஸ்களை இயக்க ‘எம்டிசி’ நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த, 2008ம் ஆண்டின் இறுதியில் 30 ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பஸ்சின் அன்றைய விலை 80 லட்சம் மற்றும் நுழைவு வரி 10 லட்சம் என 90 லட்சத்திற்கு மேல் செலவு செய்து, இந்த பஸ்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.இதனால் முதலில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாளடைவில் ‘ஏசி’ பஸ்களில் சொகுசாக பயணிக்கலாம் என்பதால், பலரும் பயன்படுத்த துவங்கினர்.

இதனால் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்கள், கால் சென்டர், வங்கி போன்றவற்றில் பணியாற்றுவோர் இந்த பஸ்களை அதிகமாக பயன்படுத்தினர். இதனால், போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்த, ‘ஏசி’ பஸ் திட்டம் கிட்டத்தட்ட வெற்றிப்படியை எட்டிப்பிடித்தது என்றே கூறலாம். இதன் விளைவாகவே கூடுதலாக பஸ்கள் வாங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து ‘ஏசி’ பஸ்களின் எண்ணிக்கை, 90ஐ தாண்டியது. மற்ற பஸ்களை விட, இந்த பஸ்கள் அறிமுகம் செய்த கொஞ்ச காலத்திலேயே போக்குவரத்துத்துறைக்கு நல்ல வருவாயை ஈட்டிக்கொடுத்தது. இவ்வாறு ‘ஏசி’ பஸ்கள் வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்தன.

இதை பார்த்த மற்ற மாநில அரசுகளும், தங்களது பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் இயக்குவதற்கு ஆலோசனை செய்தன. இந்நிலையில் சென்னையில் குண்டும், குழியுமான சாலைகள் ‘ஏசி’ பஸ்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டது. வழக்கம் போல் ேபாக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதை சரிசெய்வதற்கு கவனம் செலுத்தவில்லை. நாளடைவில் அந்த பழுது பெரிதாக மாறியது. அப்போது விழித்துக்கொண்ட நிர்வாகம், சரிசெய்ய முயற்சித்தது. இதற்காக தயாரிப்பு நிறுவனத்தை அனுகியது. அப்போது தான் பழுதை சரிசெய்வதற்கு பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு பஸ்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உதிரிபாகங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததே காரணம்.

மேலும், அந்த உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பதும் தெரியவந்தது. அதற்கும் தனியாக பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய நிலை. இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் இயக்கும் போக்குவரத்துத்துறை, சம்மந்தப்பட்ட பஸ்களை பழுதுநீக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கியது. இதன் விளைவு நாளடைவில் ‘ஏசி’ பஸ்களை முற்றிலும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சாதாரண பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது வெயில் 102 டிகிரியை தாண்டிவிட்டதால், மதிய நேரங்களில் சம்மந்தப்பட்ட பஸ்களில் பயணிக்கும் போது சூடு அதிகமாக தெரிகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மீண்டும் ‘ஏசி’ பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த பஸ்களில் கட்டணமும் குறைவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

இதுகுறித்து பஸ் பயணிகள் கூறியதாவது:
சென்னையில் வெயிலின் அளவு 102 டிகிரிக்கு மேல் உள்ளது. இதனால் கடுமையான அனல்காற்று வீசுகிறது. இந்த தாக்கம் அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது அதிகமாக இருக்கிறது. முன்பு ‘ஏசி’ பஸ்கள் பயன்பாட்டில் இருந்த போது, வெயில் காலங்களில் அதை பயன்படுத்தி வந்தோம். அதன் உள்ளே சென்றதும் குளு, குளு என இருக்கும் என்பதால் சவுகரியமாக பயணித்தோம். தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மதிய நேரங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஒருசில பஸ்களில் மேற்கூரை திறந்து இருக்கிறது. இதனால் சூரிய ஒளி நேராக பயணியின் மீது படுகிறது. அப்போது அந்த பயணி கடுமையாக பாதிக்கப்படுகிறார். எனவே மாநகரில் மீண்டும் ‘ஏசி’ பஸ்களை இயக்க வேண்டும். இதன்மூலம் கோடைகாலத்தில் நிம்மதியாக பயணிக்க முடியும். இவ்வாறு பஸ் பயணிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AC ,Chennai ,MDC , Chennai, 102 degrees, Wile, AC buses, people
× RELATED குமரி நாடாளுமன்ற தொகுதி தேர்வு...