×

ரூ.10 லட்சம் மதிப்பில் கும்பகோணம் சக்கரபாணி கோயில் தேருக்கு பாதுகாப்பு ஷெட் அமைப்பு

கும்பகோணம்: கும்பகோணம் சக்கரபாணி கோயில் தேருக்கு ரூ.10 லட்சத்தில் பாதுகாப்பு ஷெட் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கும்பகோணத்தில் காவிரியின் தென்கரையில் சக்கரபாணி கோயில் அமைந்துள்ளது. ஜலந்தராசுரன் எனும் அசுரனை அழிக்கும் பொருட்டு மகாவிஷ்ணுவால் சுதர்சன சக்கரம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சக்கரம் அசுரனை அழித்த பின்பு கும்பகோணம் நகரில் காவிரியின் தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டது. அப்போது காவிரி நதிக்கரையில் பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது. பிரம்மா சக்கரத்தை நதிக்கரை அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த சக்கரமானது சூரியனின் ஒளியைவிட பலமடங்கு பிரகாசமாய் ஒளிர்ந்தது. அதை கண்டு சூரியன் கர்வம் கொண்டார். அதனால் சக்கரத்தின் ஒளியைவிட சூரியன் தன் ஒளியை அதிகமாக கூட்டினார். கர்வமடைந்த சூரியனின் கர்வத்தை அடக்க சக்கரம் எண்ணி தனது பேரொளியை விடுவித்து சூரியன் ஒளியை தன் ஒளியில் அடக்கியது. ஒளியிழந்த சூரியன் தனது தவறை உணர்ந்து தனக்கு மீண்டும் அந்த ஒளி கிடைக்கவும், இத்தலம் தனது பெயரால் பாஸ்கர சேத்திரம் என வழங்க பெற வேண்டுமென வேண்ட சுவாமி சக்கரத்தில் இருந்து சக்கரபாணி சுவாமியாக சூரியனுக்கு காட்சி தந்து அருளினார் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் மாசி மகவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் தேரடியில் தகரத்தால் அமைக்கப்பட்ட கொட்டகையில் இருந்து வந்தது. இதனால் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தேரில் உள்ள சிற்பங்களையும், கலை நயமிக்க உருவங்களையும் பார்க்க முடியாமல் வேதனையடைந்தனர். இதைதொடர்ந்து பக்தர்கள் சார்பில் கோயில் நிர்வாகத்திடம், தேர் தெரியும் வகையில் கண்ணாடி மற்றும் பைபரினாலான ஷெட் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உபயதாரரால் ரூ.10 லட்சம் மதிப்பில் பைபர், தகரம், கண்ணாடிகளை கொண்டு பாதுகாப்பாக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தேரின் சிற்பங்கள் வெளியில் தெரிவதால் ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thuppakani Temple of Thampur Temple ,Kumbakonam , Kumbakonam, Chakarapani Temple, Security Sheet
× RELATED கும்பகோணத்தில் 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!