×

கோட்டூர் அருகே செருகளத்தூரில் தரிசு நிலத்தில் ஏரி அமைத்தால் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி

மன்னார்குடி; கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் தரிசு நிலத்தில் ஏரி அமைத்தால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள செருகளத்தூர் ஊராட்சி பகுதியில் பாமணியாற்றின் மேல்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக எவ்விதமான பயன்பாடும் இல்லாமல் தரிசாகவே கிடக்கிறது. இந்த தரிசு நிலத்தை ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி ஏரியாக மாற்றினால் இதை சுற்றியுள்ள செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், சிரல்மேல்குடி, தம்பிக்கோட்டை, புத்தகரம் தெற்கு, ஆலங்காடு, பெத்தவிளாக கோட்டகம், கோவிலூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் பயன் பெறுவதுடன், சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பும் ஏற்படும். குடிநீர் ஆதாரத்திற்கு கைகொடுக்கும்.

இது பற்றி இப்பகுதி மக்கள் மக்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கைகள் விடுத்தும் இது வரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கவும் முன் வரவில்லை. பருவமழை பாதிப்பு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல், குடிநீர் தட்டுப்பாடு, நெல் உற்பத்தி பாதிப்பு என்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு புறம்போக்கு போன்ற தரிசு நிலங்களை ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி ஏரி, குளங்களாக சீரமைத்தால் பருவ மழை பெய்யும் காலங்களில் அவற்றில் நீர் நிரப்பி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். மேட்டூர் அணை திறக்கும் போது ஆற்றில் வரும் நீரை கொண்டு ஏரி குளங்களை நிரப்பி மக்கள் பயன் பாட்டிற்கு வைத்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான புழுதிக்குடி ராஜேஷ் கூறுகையில், கோட்டூர் ஒன்றியம் செருகளத்தூர் ஊராட்சி பகுதியில் பாமணியாற்றின் மேல் கரை பகுதியில் சுமார் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தரிசாக கிடக்கிறது. இதனை ஏரியாக மாற்றி சீரமைத்தால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும். சுமார் 6 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்திலும் இதில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலும் வெள்ளம் ஏற்படும் போது இந்த தரிசு நிலத்தின் அருகில் சித்தமல்லி ஊராட்சி, சோத்திரியம், விலங்கு வெட்டி பிள்ளையார் கோயில் அருகே பாமணியாற்றில் கண்ணன் ஆற்று தண்ணீர் கலந்து அதிக அளவில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் போது பாமணியாற்றின் கீழ்கரை உடைப்பு ஏற்பட்டு இதன் கீழ்ப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் வீடுகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதனால் இந்த தரிசு நிலத்தை ஏரியாக்கி பமணியாற்றின் கீழே அமைந்துள்ள கீழ் குமிழி மூலம் ஏரி தண்ணீரை கீழ்ப்பகுதிகளுக்கு கொண்டு சென்று பலன் பெற வாய்ப்பு ஏற்படும். இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பல முறை வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட மற்றும் தமிழக அரசும் உரிய முறையில் பரிசீலித்து இக்கோடைக்காலத்தை பயன்படுத்தி உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : irrigation facility ,Serugulathur ,slums ,land ,Kothore , Kootur Union, Lake, Irrigation facility
× RELATED சித்திரை திருவிழா நெருங்குகிறது...