×

ஒடிசாவில் பானி புயல் பலி எண்ணிக்கை 34 ஆனது

புதுடெல்லி: ஒடிசாவில் பானி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. புயல் தாக்கி இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு நீடிப்பதால் மக்கள்  அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒடிசா மாநிலத்தை கடந்த வெள்ளியன்று பானி புயல் புரட்டி போட்டது. புயல் காரணமாக மணிக்கு 240 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான வீட்டின் மேற்கூரைகள் பறந்தன.  பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்ள் முறிந்து விழுந்தன. தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  பானி புயலால் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. புயல் தாக்கி 2 நாட்கள் கடந்த நிலையில்,  மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. இதனிடையே பானி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதன்படி, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பூரி மற்றும் குர்தா பகுதிகளை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் 50 கிலோ அரிசி, ₹2000  நிவாரண தொகையாக வழங்கப்படும். குர்தா மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு ₹1000 மற்றும் அரிசி வழங்கப்படும். கட்டாக், கேன்ட்ரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் மக்களுக்கு மாத ஒதுக்கீடு அடிப்படையில் அரிசி மற்றும் ₹500  வழங்கப்படும்.

முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு ₹95100, பகுதியாக சேதடைந்த வீடுகளுக்கு ₹52,000, லேசான சேதமடைந்த வீடுகளுக்கு ₹3,200 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக உணவுகளை  விநியோகிக்கப்பதற்காக அரசு ஏற்பாடு ெசய்துள்ளது. தலைநகர் புவனேஷ்வர் மற்றும் பூரியில் தொலைத் தொடர்பு மற்றும் குடிநீர் விநியோகம் ஓரளவு தொடங்கியுள்ளது. மேலும் மின்விநியோகத்தை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. குர்தா, பூரி,  புவனேஷ்வரில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அங்கு போக்குவரத்து தொடங்கியுள்ளது.  ரத்து செய்யப்பட்ட 138 ரயில்களில் 85 ரயில்கள் நான்கு நாட்களில் மீண்டும் இயக்கப்படவுள்ளது.  நேற்று முன்தினம் காலை முதல் விமான சேவையும் தொடங்கியது.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்டவை, செல்போன் சிக்னல்களை பெற்றுத்தரும் 930 மையங்களை உடனடியாக  சீரமைத்துள்ளன.

ஜெகந்நாதர் கோயிலுக்கு பாதிப்பு
பானி புயலின் தாக்குதலினால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. இதில் பூரி ஜெகந்நாதர் கோயிலில் சிங்க நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள ஜெய் மற்றும் விஜய் சிங்க சிலைகளும் சிறிது சேதமடைந்துள்ளன.  இதுகுறித்து ஜெகந்நாதர் கோயில் தலைமை நிர்வாகி கூறுகையில், ``கோயிலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி பிரதான பகுதிகள் பாதிக்கப்படவில்லை. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஆய்வு மேற்கொள்ள கேட்டுக்  கொண்டுள்ளோம். மேலும், சிதிலமடைந்த சிலைகளின் அருகே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் தங்களது விருப்பம் பூர்த்தியாக கயிறு கட்டும் கற்பக விருட்சத்தின் கிளைகளும் முறிந்து விட்டன. முறிந்த கிளைகளை கோயிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். `நிலசால உபாபனா’ எனப்படும் கோயிலின் தோட்டம் பெருமளவில் சேதமடைந்துள்ளது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Orissa ,storm ,Bani , Bani storm, Odisha, The number , victims ,29
× RELATED தெய்வச்செயல்