×

சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகபட்சமாக நேற்று வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் வெப்ப காற்று வீசும் என்றும் பல இடங்களில் 100 டிகிரி வெப்பத்தை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் வங்கக் கடலில் புயல் உருவானது. அதனால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறிச் சென்று ஓடிசா வழியாக கரை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது.

இதற்கிடையே, அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதற்கு முன்னோட்டமாக 3ம் தேதியே தமிழகத்தில் அதிகபட்சமாக 111 டிகிரி அளவுக்கு வெயில் உச்சத்தை தொட்டது. தொடர்ந்து அதே நிலையில் வெயில் நீடித்து வருகிறது. இந்நிலையில், பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எல்நினோ காரணமாக பசிபிக் கடல் சார்ந்த பகுதிகளில் வெப்ப காற்று அதிக அளவில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் தமிழகம், தெலங்கானா, ஆந்திர கடலோரப் பகுதி, ராயலசீமா, வடக்கு உள் கர்நாடகா பகுதிகளில் வெப்ப காற்று அலை அலையாக வீசும். குறிப்பாக ஆந்திர கடலோரப் பகுதியில் கடுமையான வெப்ப காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்ப காற்றின் அலை 4 நாட்களுக்கு நீடிக்கும். இதன் முன்னோட்டமாக வேலூரில் நேற்று அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது. திருத்தணி, திருச்சி 109 டிகிரி, பாளையங்கோட்டை, மதுரை, கரூர் 106 டிகிரி, சேலம், தர்மபுரி, சென்னை 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு அனல் சார்ந்த நோய்களும், முதியோருக்கு கை கால் முடக்கும் அளவுக்கு பாதிப்பு வரும். அதனால் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பழ ரசங்கள் அதிகம் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,heat wave ,Meteorologists ,Chennai ,Tamil Nadu , Chennai, District, 100 Degrees, Weil
× RELATED சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3...