×

சேலம் அருகே வடமாநில கொள்ளையர் அட்டூழியம் அடுத்தடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண்களிடம் நகை பறிப்பு: போலீசார் மீது கற்களை வீசி தப்பி ஓட்டம்

சேலம்: சேலம் அருகே அடுத்தடுத்து  எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண்களிடம் வடமாநில கொள்ளையர் கும்பல் நகைகளை பறித்து சென்று வருகின்றனர். ஒரு கும்பல் துரத்தி சென்ற போலீசார் மீது கற்களைவீசி  விட்டு தப்பியது. சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மாவேலிபாளையம் அருகே கடந்த 3ம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் 3.30 மணிவரை அடுத்தடுத்து மைசூர், சேரன், மங்களூரு, ஆலப்புழா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்த 10 பெண்களிடம்  30 பவுன் நகையை பறித்துக்கொண்டு வடமாநில கொள்ளை கும்பல் தப்பியது. மாவேலிபாளையத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், இவ்வழியே 20 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்வதை அறிந்த கொள்ளையர்கள் தங்கள்  கைவரிசையை காட்டியுள்ளனர். இதுபற்றி அறிந்து ரயில்வே எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் சேலத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த ரயில் கொள்ளையில், 20க்கும் மேற்பட்ட வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து இந்த கொள்ளையர்களை பிடிக்க கோவை ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், வடமாநில கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து தீவிர  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், ேநற்று முன்தினம் நள்ளிரவு 1.20 மணி முதல் 2 மணிவரை மாவேலிபாளையம் வழியாக சென்ற ஆலப்புழா, சேரன் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் வடமாநில கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்கள் 3 பெண்களிடம் 7 பவுன் நகையை பறித்துக் ெகாண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினர். அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் படை போலீசார், கொள்ளையர்கள் துரத்திச் சென்றனர். ஆனால் கொள்ளையர்களோ போலீசார் மீது கற்களை வீசி விட்டு தப்பியோடி அங்குள்ள புதர்களுக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே, மேற்கு மண்டல ஐஜி  பெரியய்யா நேற்று மாவேலிபாளையத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, ரயில்வே டிஐஜி  பாலகிருஷ்ணன், சேலம் சரக டிஐஜி செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் ஆகியோர் உடன் இருந்தனர். பாலம் கட்டப்படும் இடம் அருகே பெரிய மாந்தோப்பு மற்றும் சவுக்கு தோப்பு உள்ளது. அப்பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளனரா? என நேற்று 70க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்தனர். ரயில்களில் வடமாநில ெகாள்ளையர்கள்  தொடர்ந்து பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வருவதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Northwest pirate, Salem,,jewelery flops , police
× RELATED வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த...