×

பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்பு ரிசார்ட்டில் இளம்பெண்களுடன் போதையில் இளைஞர்கள் ஆபாச நடனம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்பில்அமைக்கப்பட்ட ரிசார்ட்டில் மேடையமைத்து இளம்பெண்ணை ஆபாசமாக நடனமாட வைத்தும் போதையில் ஆடிப்பாடி கூச்சலிட்ட இளைஞர்கள் 162 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார், டாப்சிலிப் என சுற்றுலா பகுதிகள் உள்ளன. ஆனைமலை மற்றும் அதனை சுற்றி 15 ரிசார்ட்டுகள் செயல்படுகிறது. சேத்துமடையில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ‘அக்ரி நெஸ்ட் ரிசார்ட்’ என்ற பெயரில், ஒரு சுற்றுலா சொகுசு விடுதியை வருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த ரிசார்ட்டுக்கு கேரள மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 170 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் பாடல்கள் போட்டு திறந்தவெளி மேடையில் நடனமாடி கூச்சல் போட்டுள்ளனர். நள்ளிரவு நேரம் கடந்தும் சினிமா பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிட்டு ஒரு இளம்பெண்ணை ஆபாசமாக நடனமாட வைத்துள்ளனர். மேலும் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக ஆடியுள்ளனர். இதனால், ரிசார்ட்டின் அருகே வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் சிலர், ரிசார்ட்டை முற்றுகையிட்டு சம்பந்தபட்டவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான 40 போலீசார், நள்ளிரவில் சேத்துமடைக்கு  வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரிசார்ட்டில் இளைஞர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் இருந்ததும், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து விசாரித்தனர். இதன்பேரில், கும்மாளம் போட்டு அத்துமீறலில் ஈடுபட்ட 162 பேரை வேனில் ஏற்றிசென்று, அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், ரிசார்ட்டில் ஆங்காங்கே கிடந்த மதுபாட்டில்கள், கஞ்சா, மாத்திரைகளை கைப்பற்றினர். அதன்பிறகு, ஆனைமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து 162 பேரையும் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், `‘பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இவர்கள் ஒன்று சேர்ந்து, ‘இன்ஸ்டாகிராம் டீம்’ என்ற பெயரில் தனி சமூக வலைதளத்தை உருவாக்கி  நண்பர்களாக பழகி வந்துள்ளனர். யாருக்கேனும் பிறந்தநாள் நிழ்ச்சிகள் வரும்போது, ஒன்றாக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். நண்பர்களாக பழகி வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சேத்துமடையில் உள்ள ரிசார்ட்டுக்கு வந்து, மது விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதிக ஒலியுடன் ஆடிபாடி சத்தம் போட்டுள்ளனர். அவர்களையும், தோப்பு உரிமையாளர், ரிசார்ட் உரிமையாளரையும் கைது செய்து  விசாரணை மேற்கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவித்தனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் அதிர்வலை ஏற்பட்ட நிலையில்,  சேத்துமடையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண்களை ஆபாசமாக நடனமாட வைத்து இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி செயல்பட்டதால் சீல்வைப்பு

சேத்துமடையில் உள்ள இந்த ரிசார்ட், பல ஆண்டுகளாக அனுமதியின்றி  நடந்து  வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராசாமணி, ரிசார்ட்டை சீல் வைத்து மூட உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் தலைமையில் அந்த ரிசார்ட்டுக்கு நேற்று மதியம் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. சேத்துமடையில் மது விருந்துடன்  ரிசார்ட் நடத்த, வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாததால், தோப்பு உரிமையாளர் கணேஷ், ரிசார்ட் நடத்தி வந்த சேத்துமடையை சேர்ந்த வருண், சூப்பர்வைசர் கமால் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Pollachi ,Coventry Resort , Young people dance,young women , Coventry Resort near Pollachi
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...