×

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் இன்று மாநாடு: தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் இன்று மாநாடு நடக்கிறது. வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 36வது வணிகர் தின மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடக்கிறது. மாநாட்டிற்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை  வகிக்கிறார். மத்தியசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.சாமுவேல் தலைமை வகிக்கின்றார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணி அளவில் வணிகக்கொடி ஏற்றும் விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மாநில  இணைச்செயலாளர் என்.கிருஷ்ணன் கொடியை ஏற்றி வைக்கிறார். மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றுகிறார். மாநிலப் பொருளாளர்  ஏ.எம்.சதக்கத்துல்லா பிரகடன தீர்மானங்களை  முன்மொழிகின்றார்.

அகில இந்திய வணிகர் சம்மேளன தலைவர் பி.சி.பார்டியா, பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்து பாராட்டுரை வழங்குகின்றனர். மாநாட்டில்  முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி கலந்து  கொண்டு வ.உ.சி.வணிகச் செம்மல் விருதுகளை வணிக சாதனையாளர்களுக்கு வழங்குகிறார். விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு மறைந்த பொதுச்செயலாளர் க.மோகன் நினைவாக  கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறார். சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் நன்றியுரையாற்றுகிறார். இது குறித்து விக்கிரமராஜா அளித்த பேட்டி: மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதற்காக  பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பேருந்து, கார்கள் நிறுத்தும் வசதி, இருசக்கர வாகனங்கள்  தனியாக நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.  மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து வணிகர்களுக்கும், சைவ- அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  வணிகர்கள் தங்குமிடம், மற்றும் குளிப்பதற்கான இட வசதிகள் சென்னை  மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 36வது வணிகர் தினத்தை முன்னிட்டும், மாநாட்டை முன்னிட்டும் நாளை தமிழகத்தில் உள்ள சிறு கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்திற்கும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்த வணிகர்களின் துயர்களை போக்கவும், வணிகர்களை எழுச்சி பாதைக்கு திருப்பிடவும், இந்திய வணிகர் எழுச்சி மாநாடு ஒரு திருப்பு முனையை நிச்சயம் ஏற்படுத்தும் வகையில்  இம்மாநாடு அச்சாரமாய் அமைந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Holidays ,Tamilnadu Traders Association Conference ,shops ,Chennai ,Tamilnadu , Tamilnadu Trading Societies Association, Conference, Tamilnadu, Shops, Vacation
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி