×

தடையை மீறி ஓட்டல்களில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு

* அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேவை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை சேர்த்து வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவைகள் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு குறைந்தது.

இந்நிலையில் மளிகைக்கடை, உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்களும் டாஸ்மாக் பார்களில், பெட்டிக்கடைகளில் தங்கு தடையின்றி விற்கப்படுகின்றன. இதனால் சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.

மீதமுள்ள உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து தெருவோரங்களில் வீசுகின்றனர். இவைகளை கால்நடைகள் உண்பதால் உயிரிழந்து தெருக்களில் கிடக்கின்றன. இச்சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல துணிப்பைகள், பாத்திரங்கள் மற்றும் கூடைகளை எடுத்துச்செல்வது அவசியம்.

மேலும் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பாலித்தீன் பைகளில் விற்பனை செய்யக்கூடாது. மாறாக பேப்பர், சணல், துணி போன்றவற்றிலான பைகளில் மட்டுமே பொட்டலமிட்டு தரவேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனை தடுக்க அதிகாரிகள் மீண்டும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறுகயைில், திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் தடை ஆரம்பத்தில் சரியாக கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். உணவுக்கழிவுடன் வீசப்படும்  கேரி பைகளை கால்நடைகள் சாப்பிடுவதால், அவற்றின் உணவுக்குழாயில் அடைப்பு  ஏற்பட்டு இறக்க நேரிடும்.

பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும்  நச்சுப்புகையை சுவாசிப்பதால் புற்றுநோய் மற்றும் சூடான உணவு பொருட்களை  பிளாஸ்டிக்கில் வைத்து உண்ணுதல் மற்றும் பிளாஸ்டிக் பைகளை சாக்கடையில்  போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி டெங்கு  போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் தடையை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hotels , dindigul,Plastic Covers,Plastic usage,Tamil nadu government
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்