×

20 லட்சம் கேட்டு ஹேக்கர்கள் மிரட்டல் ஆந்திரா, தெலங்கானா அரசு இணைய தளங்கள் முடக்கம்

ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநில மின்துறை இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள், அதை விடுவிப்பதற்கு 20 லட்சம் கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர். தெலங்கானா மின் விநியோக நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை மர்ம நபரிடம் இருந்து இ மெயில் ஒன்று வந்தது. அதை மின் நிறுவன பணியாளர் ஒருவர் கிளிக் செய்ததும் அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், தெலங்கானா மாநில மின்துறை இணையதளமும் முடக்கப்பட்டது. இதனால், முக்கிய தகவல்களை பரிமாற முடியாமல் இருமாநில அரசுகள் தவிக்கின்றன. இந்நிலையில், 20 லட்சத்தை பிட்காயினாக தந்தால் முடக்கப்பட்ட இணையதள பக்கங்களை மீட்டுத் தருவதாக அந்த ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தெலங்கானா மாநில மின் விநியோகத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தெலங்கானா சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் ஆணையாளர்  (சைபர் குற்றங்கள்) ரகு கூறுகையில், ‘‘வழக்கமாக இணையதள பக்கத்தை முடக்கும் ஹேக்கர்கள், பணயத்தொகையை செலுத்துவதற்கான இணைப்பு ஒன்றை கொடுப்பார்கள்.

ஆனால், இந்த முடக்கத்தின்போது ஹேக்கர்கள் பணத்தை செலுத்துவதற்கான இணைப்பை வழங்குவதற்கு முன்பே, முடங்கிய இணையதள பக்கங்கள் செயல்பட தொடங்கி விட்டன. இருப்பினும், இணையதளத்தை முடக்கிய நபர்கள் யார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார்.   இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியதை அடுத்து தென்பகுதி மின்விநியோக நிறுவன இயக்குனர் சீனிவாஸ் கூறுகையில்,` எங்களது இணையதள பக்கத்தை டிசிஎஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்புத்துறை வல்லுனர்கள் உடடினயாக செயல்பட்டு முடங்கிய இணையதள பக்கத்தை புதுப்பித்து விட்டார்கள். சேமித்து வைக்கப்பட்டிருந்த எந்த தகவலுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எங்களது சர்வர் மிக பாதுகாப்பானது என்பதால் தீங்கு எதுவும் ஏற்படவில்லை’ என்றார். இதேபோல் ஆந்திராவின் மின்விநியோக இணையதள பக்கமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hackers ,Andhra ,Telangana , Hackers threatened, demand 20 lakhs ,freezes Andhra and Telangana government ,websites
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து