* நம்பியாற்றில் தண்ணீர் வற்றியது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
களக்காடு : திருக்குறுங்குடி மலையில் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் நம்பியாறு உற்பத்தியாகிறது. நம்பியாற்றின் கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோயிலும் உள்ளது.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் நம்பியாற்றில் புனித நீராடிய பின் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் சுற்றுலா பயணிகளும் நம்பி ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சோதனை சாவடி அருகே நம்பியாற்றில் தனிஇடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை.
பொதுவாக டிசம்பர் மாதத்தில் கனமழை பெய்யாவிட்டாலும் உள்மலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்வது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்திலும் சாரல் மழை பெய்யவில்லை. களக்காடு, திருக்குறுங்குடி மலையிலும் மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதையடுத்து வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
வறட்சியால் திருக்குறுங்குடி மலையில் உள்ள நம்பியாற்றில் தண்ணீர் வற்றியது, பாறைகளாக மட்டுமே காட்சி அளிக்கின்றன. தண்ணீர் இல்லாததால் நம்பி கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டமும் இன்றி நம்பியாறு வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.
நாங்குநேரி, ராதாபுரம் வட்டார மக்களின் முக்கிய நீராதாரமாக நம்பியாறு உள்ளது. நம்பியாற்று பாசனத்தின் மூலம் இப்பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. தற்போது குளங்களிலும் தண்ணீர் வற்றி விட்டதால், விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் எழும் என்பதால் பொதுமக்களும் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் வறட்சியின் காரணமாக திருக்குறுங்குடி மலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

